அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம்: பாஜக துணை முதல்வர் வீடு மீது தாக்குதல்


பட மூலாதாரம், Getty Images
பற்றி எரியும் ரயில்.
இந்திய பாதுகாப்பு படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் நடக்கிறது. நேற்றைப் போலவே இன்றும் பிகார், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய முப்படைகளுக்கு ஆளெடுப்பு நடக்கவில்லை. இந்நிலையில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பதற்கு இந்தத் திட்டத்தை அறிவித்தது இந்திய அரசு.
ஜூன் 14ஆம் தேதி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது பதினேழரை முதல் 21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணி வழங்கப்படும் என்றும், 4 ஆண்டுகள் முடிந்த பின்னர் ராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் சேர்ந்தவர்களில் 25% பேருக்கு நிரந்தரப்பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ் நிரந்தர பணி வாய்ப்பு இல்லாமல் போகும் என்றும், 21 வயதைக் கடந்தவர்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்றும் கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி, மற்றும் ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் அக்னிபத் திட்டத்தில் இல்லாதது ஆகியவையே முந்தைய முறையிலேயே ஆள்சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு காரணமாக உள்ளது.
ஆனால், 25% பேருக்கு மட்டுமே பனி நிரந்தரம் என்றாலும் 100% பேரும் அதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு என்றும், பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகளை பெற சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு கூறுகிறது.
போராட்டங்கள் காரணமாக அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை, 2022ஆம் ஆண்டுக்கு மட்டும் 21இல் இருந்து 23ஆக உயர்த்தி ஜூன் 16ஆம் தேதி அறிவித்தது இந்திய அரசு. எனினும், இந்த அறிவிப்பு போராட்டங்களை தணிக்க உதவவில்லை.
நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமாகத் தொடர்கின்றன.
200 ரயில் சேவைகள் பாதிப்பு, 35 ரயில்கள் ரத்து
போராட்டங்கள் காரணமாக, இந்தியா முழுவதும் 200 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.
துணை முதல்வர் வீடு, பாஜக தலைவர் வீடு மீது தாக்குதல்
பாஜகவைச் சேர்ந்த பிகார் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீடும் பேதியா எனும் ஊரில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது. ரேணு தேவி தற்போது தலைநகர் பட்னாவில் உள்ளார் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.
அதைப் போல பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில் குறைந்தது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
பிகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் டயர் ஒன்றையும் தண்டவாளத்தில் வைத்து எரித்துள்ளனர்.
ஜூன் 15 முதல் பிகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடந்தது. பிகாரின் சப்ரா மாவட்டத்தில் நேற்று ஒரு ரயில் எரிக்கப்பட்டது.
இன்றும் பிகாரில் மொஹிதீன் நகர், லக்மினியா ஆகிய ரயில் நிலையங்களிலும், உத்தர பிரதேசத்தின் லாக்கீசராய் மற்றும் பலியா ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று கொண்டிருந்த ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
பலியா ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் காலியாக இருந்த ரயில் பெட்டிக்கு தீவைத்ததாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.கே.நய்யார் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டம்.
தெலங்கானா மாநிலத்தின் செகந்தராபாத்தை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயிலுக்கும் போராட்டக்காரர்கள் இன்று காலை தீ வைத்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: