கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டனரா? – பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்

- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்

கும்பகோணத்தில் சில நாட்களுக்கு முன்பாக புதுமணத் தம்பதி கொல்லப்பட்ட விவகாரம் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. பட்டியலினத்தவர் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஆணவக் கொலையின் மறுவடிவமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு…
இந்த விவகாரம் சாதி தொடர்பான பெருமிதத்தால் நடத்தப்பட்டதா அல்லது பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தனவா என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தனர். உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது சோழபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளது துளுக்கவேலி ஆண்டவன் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதிக்கு சக்திவேல், சதீஷ், சரவணன் என மூன்று மகன்களும் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர்.
இதில் சேகரும் சக்திவேலும் கொத்தனாராக வேலை பார்த்து வருகின்றனர். சதீஷ் எம்.பி.ஏவும் சரவணன் டி.எம்.இயும் முடித்துவிட்டு திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சகோதரர்கள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டது. சரண்யா சென்னையில் சில தனியார் மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றிவந்தார்.
தேன்மொழிக்கு மனநலம் அவ்வப்போது பாதிக்கப்படும் பிரச்னை இருந்த நிலையில், அவரைக் கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு அழைத்துவந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தார் சரண்யா. பணியாற்றும் நேரம் போக, மீதி நேரத்தில் அவரை மருத்துவமனையில் இருந்து பார்த்துக்கொண்டார் அவர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னார் கிராத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி – வடிவேல் தம்பதியின் ஒரே மகன் மோகன். இவர் வேதியியலில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். வடிவேல் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரி மட்டும் பொன்னூர் கிராமத்தில் மகன் அனுப்பிவந்த மாதாந்திரத் தொகையில் வாழ்க்கை நடத்திவந்தார். இவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜனவரி மாதவாக்கில் இவரது மனநலம் மிகவும் மோசமடையவே, இவரைச் சென்னையில் உள்ள அரசு மனநலக் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார் மோகன். அந்தத் தருணத்தில், தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க சரண்யாவும் அங்கிருந்த நிலையில், இருவரும் பழக ஆரம்பித்தனர்.
சரண்யாவின் வீட்டில் எதிர்ப்பு ஏன்?
மோகனைப் பொறுத்தவரை, மனநலம் பாதிக்கப்பட்ட தாயைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலையில், காதலைத் தொடர பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை. ஆனால், சரண்யாவின் சகோதரர் சக்திவேல் இந்த காதலை ஏற்கவில்லை. இதற்குக் காரணம் இருந்தது.
சரண்யாவின் மூத்த சகோதரரான சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு திருமணம் செய்வது குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பிலிருந்தே பேசிவந்தனர். ரஞ்சித்தும் சரண்யாவும் சில நாட்கள் பழகியும் வந்தனர். ஆனால், ரஞ்சித்திற்கு குடி, போதை போன்ற பழக்கங்கள் இருக்கவே, அவரை சரண்யாவுக்குத் திருமணம் செய்து வைப்பது குறித்து சதீஷும் சரவணனும் மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சரண்யாவும் ரஞ்சித்தைவிட்டு விலக ஆரம்பித்திருந்தார்.
ஆனால், மூத்த சகோதரரான சக்திவேல் இதனை ஏற்கவில்லை. தனது மைத்துனருக்கே சரண்யாவைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமெனக் கூறி சண்டையிட்டுவந்தார். இந்த நிலையில், சரண்யாவும் மோகனும் காதலிக்கும் விவகாரம் தெரியவந்தபோது அதற்கு அவரது பெற்றோரோ, சக்திவேல் தவிர்த்த மற்ற இரு சகோதரர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், சக்திவேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 9ஆம் தேதி வியாழக்கிழமையன்று தனது தாய் பரமேஸ்வரி மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகில் உள்ள கோவில் ஒன்றில் சரண்யாவைத் திருமணம் செய்தார்.
விருந்துக்காக அழைக்கப்பட்ட தம்பதி கொலை
இந்தத் திருமணம் குறித்த தகவலை தனது சகோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார் சரண்யா. இதற்குப் பிறகு சரண்யாவை அழைத்த சக்திவேல், திங்கட்கிழமையன்று மோகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் அவரது பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்டுத் தரும்படியும் கேட்டிருக்கிறார்.
இதையடுத்து மோகனும் சரண்யாவும் துளுக்கவேலிக்கு வந்துள்ளனர். சக்திவேலும் சரண்யாவும் கும்பகோணத்திற்குச் சென்று நகைகளை மீட்ட பிறகு, வீட்டுக்கு வந்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, பிற்பகலில் சென்னைக்குச் செல்வதற்காக மோகனும் சரண்யாவும் புறப்பட்டனர். சரண்யா, சக்திவேல், மோகன் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியில் வந்ததும், வீட்டின் மற்ற பெண்களை வீட்டுக்குள் போட்டுப் பூட்டினார் சக்திவேல்.
உடனடியாக ரஞ்சித்திற்குக் குரல் கொடுக்க, ஆயுதத்துடன் ஒளிந்திருந்த அவர் முதலில் மோகனைப் பின்னாலிருந்து கழுத்தில் வெட்டியதாகவும் அங்கிருந்து தப்பி ஓடிய சரண்யாவை அடுத்த திருப்பத்திலேயே துரத்திப் பிடித்த சக்திவேல் அவரது கழுத்தைப் பிடித்து நெரிக்க, அங்கு ஓடி வந்த ரஞ்சித் சரண்யாவையும் வெட்டியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் கொலையான இருவரில் சரண்யா பட்டியலினத்தையும் மோகன் செங்குந்த முதலியார் இனத்தையும் சேர்ந்தவர்கள். ஆகவே, முதல் பார்வையில், இந்தக் கொலை சாதிக்கு வெளியே நடந்த திருமணத்தால் நிகழ்ந்த கொலையென்று கருதப்பட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்திய ஆணவக் கொலை என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட ஆரம்பித்தது.
“சாதிக்காக நடந்த கொலையில்லை”
ஆனால், இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுக்கிறார்கள் சக்திவேலின் குடும்பத்தினர். “இது நிச்சயமாக சாதிக்காக நடந்த கொலையில்லை. எங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. அம்மா மன நலம் சரியில்லாதவர். நானும் என் அண்ணனும் திருப்பூரில் இருந்தோம். அம்மா, என் மனைவி, என் அண்ணன் மனைவி மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல இப்படிச் செய்திருக்கிறார்கள்” என்கிறார் சரண்யாவின் சகோதரரான சரவணன்.
சரண்யாவின் மற்றொரு சகோதரரான சதீஷ் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருப்பதை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடி சரண்யா, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்ததில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்கிறார் சதீஷ். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். வேறு எதையும் பேசும் நிலையில் அவர்கள் இல்லை.
சரண்யாதான் அந்த வீட்டின் ஆணி வேர் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். தன் சகோதரர்களைப் படிக்கவைத்து, தன் தாய்க்கு மருத்துவம் பார்த்து மிகப் பொறுப்புடன் நடந்துகொண்ட பெண் என்கிறார்கள் அவர்கள். தனது மனநல பிரச்னையிலிருந்து மீண்ட அவரது தாய், மீண்டும் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறார்.
மோகனின் தாய் பரமேஸ்வரி
சுயநினைவின்றி புலம்பும் தாய்
ஆனால், சரண்யாவைத் திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட மோகனின் கதை இன்னும் பரிதாபமானது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ள உள்ளடங்கிய கிராமம் பொன்னூர். ஊர் கடைசியில் அமைந்திருக்கும் ஆலமரத்தின் கீழ் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மோகனின் தாய் பரமேஸ்வரி.
“நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. வேணாம் வேணாம்னு.. இப்படி நடந்துருச்சு. தீடீர்னு கூட்டினு போய் கல்யாணம் பண்ணுனான். செத்துப்போய்ட்டான்” என்று சுயநினைவின்றி புலம்புகிறார் அவர்.
மோகன் ஐந்தாவது படிக்கும்போதே அவரது தந்தை வடிவேல் இறந்துவிட, மிகச் சிரமப்பட்டு அவரை படிக்கவைத்து ஆளாக்கியவருக்கு தன் மகன் இறந்துவிட்டதைக்கூட முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
மகனுக்கு இறுதிச் சடங்குகளை முடித்து ஒரு நாளுக்கு மேலாகியும் குளிக்காமலும் உடுத்திய உடையை மாற்றாமலும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார் அவர். “இனிமே என்ன இருக்குது.. நானும் கெளம்ப வேண்டியதுதான்” என்கிறார்.
ஊர்க்காரர்களைப் பொறுத்தவரை, மோகனை விருந்துக்கு அழைத்துச் சென்று கொன்றுவிட்டதாக பெண் வீட்டாரின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆதரவின்றி இருக்கும் மோகனின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்கிறார்கள்.
சோழவரம் காவல்துறையைப் பொறுத்தவரை, ஜாதி ஆணவத்தில் நடந்த கொலையாகத் தெரியவில்லை என்கிறது. தன்னை சரண்யா நிராகரித்துவிட்ட ஆணவத்தில் ரஞ்சித்தும் அவரால் துண்டப்பட்டு சக்திவேலும் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக காவல்துறை கருதுகிறது.
இப்போது ரஞ்சித், சக்திவேல் ஆகிய இருவரும் சிறையில் இருக்கிறார்கள். காதல் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் இதனை ஆணவக் கொலை என்றுதான் அழைக்க வேண்டும் என்று சிலரும், ஆணாதிக்கக் கொலை என்று அழைக்க வேண்டுமென சிலரும் விவாதித்துவருகிறார்கள்.
இது அப்பட்டமான ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்கிறார், மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் கதிர். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கதிர், “இந்தப் படுகொலையில் நேரடியாக சாதி இல்லை என்றாலும் இவை ஆணவக் கொலைகள் தான். ஒரு பெண்ணின் இணைந்து வாழக்கூடிய அல்லது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு எதிராக குறுக்கீடு செய்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ அவற்றை ஆணவக் குற்றங்கள் என்று தான் பார்க்க வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவாதங்களுக்கு அப்பால், வெகு தூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் தனியாக அமர்ந்து உயிரோடில்லாத மகனோடு பேசிக்கொண்டிருக்கிறார் பரமேஸ்வரி.
சாதி மறுப்புத் திருமணம்: வீடு புகுந்து கடத்திய பெற்றோரை மன்னித்த இளம்பெண்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: