நரேந்திர மோதியின் தந்தை: தனது தாயின் 100வது பிறந்தநாளில் தனது தந்தையை நினைவு கூர்ந்து சொன்னது என்ன?


பட மூலாதாரம், ANI
பிரதமர் நரேந்திர மோதி, தனது தாயாரின் பிறந்தநாளில் அவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். நரேந்திர மோதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், தனது தாயார் தொடர்பான பல நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இதோடு முதன்முறையாகத் தனது தந்தையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல. பாசம், பொறுமை, நம்பிக்கை, வாழ்க்கையின் உணர்வு ஆகியவை அதில் நிறைந்திருக்கும். இன்று நான் எனது மகிழ்ச்சியை, எனது அதிர்ஷ்டத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் அம்மா ஹீராபென் இன்று, ஜூன் 18 ஆம் தேதி தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதாவது, அவர் பிறந்து ஒரு நூற்றாண்டு ஆகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
” என் தந்தை இன்று இருந்திருந்தால், அவரும் கடந்த வாரம் 100 வயதை எட்டியிருப்பார். அதாவது 2022 ஆம் ஆண்டு என் தாயின் நூறாவது பிறந்த நாள். இதே ஆண்டு என் தந்தையின் பிறந்த நூற்றாண்டு நிறைவடைகிறது.”என்று அவர் எழுதினார்.
பட மூலாதாரம், narendramodi.in
பிரதமர் மோதி தனது தந்தையை பற்றி முதல் முறையாக பொதுவெளியில் குறிப்பிட்டுள்ளார்
“பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கம் எங்களிடம் இருக்கவில்லை. ஆனால் குடும்பத்தில் உள்ள புதிய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள், என் தந்தையின் பிறந்த நூற்றாண்டு விழாவில் இம்முறை 100 மரங்களை நட்டுள்ளனர்” என்று பிரதமர் மோதி எழுதியுள்ளார்.
தனது வாழ்க்கைக்காக பெற்றோருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோதி, “இன்று என் வாழ்க்கையில் எது நன்றாக இருந்தாலும், எனது ஆளுமையில் எது நன்றாக இருந்தாலும், அது தாய் மற்றும் தந்தையின் பரிசு. இன்று நான் டெல்லியில் அமர்ந்திருக்கும்போது, ஏராளமான பழைய கால நினைவுகள் எனக்கு வருகின்றன,” என்றார்.
பிரதமர் மோதி தனது தாய் ஹீராபென் குறித்து பல தனிப்பட்ட விஷயங்களை கூறினார்
– மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் தனது தாய் பிறந்ததாக பிரதமர் மோதி கூறியுள்ளார். இது வட்நகருக்கு அருகில் உள்ளது. ஹீராபென் பிறந்து சில நாட்களுக்குப் பிறகு, பிரதமரின் தாய்வழிப் பாட்டி இறந்துவிட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஏற்பட்ட உலகளாவிய பெருந்தொற்றில் அவர் உயிரிழந்தார். “என் தாயின் குழந்தைப் பருவம் அம்மா இல்லாமல் கழிந்தது. அவரால் அம்மாவிடம் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை, தாயின் மடியில் தலையை வைத்துத் தூங்க முடியவில்லை. என் அம்மாவுக்கு கல்வி கற்கும் அதிர்ஷ்டம் இருக்கவில்லை. அவர் பள்ளி கதவைக் கூட பார்த்ததில்லை. அவர் பார்த்தது எல்லாம் வீட்டில் இருக்கும் வறுமை மற்றும் இல்லாமை,” என்று பிரதமர் எழுதியுள்ளார்.
-தனது தாய் குடும்பத்தில் மூத்தவர் என்றும் திருமணமான பிறகு அவர் வீட்டின் மூத்த மருமகள் என்றும் பிரதமர் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், narendramodi.in
-தனது குழந்தைப் பருவ வீட்டைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோதி, “வட்நகரில் நாங்கள் வசித்து வந்த வீடு மிகவும் சிறியது. அந்த வீட்டில் ஜன்னல்களோ, குளியலறையோ, கழிவறையோ இல்லை. மொத்தத்தில், மண் சுவராலும் ஓலைக் கூரையாலும் ஆன அந்த ஒன்றரை அறை அமைப்புதான் எங்கள் வீடு. அதில் அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் வாழ்ந்தோம். அந்தச் சிறிய வீட்டில் அம்மாவுக்குச் சமைப்பதில் ஓரளவு வசதி செய்து கொடுக்க என் அப்பா, மூங்கில் குச்சிகள், மரப் பலகைகளைக் கொண்டு வீட்டில் ஒரு சாரக்கட்டு செய்திருந்தார். அந்த இடம் தான் எங்கள் வீட்டின் சமையலறையாக இருந்தது. அம்மா அதில் ஏறி உணவு சமைப்பார். நாங்கள் அதில் அமர்ந்து உணவு உண்போம்,” என்று எழுதினார்.
– தனது தந்தையைக் குறிப்பிட்டு மோதி,” அப்பா அதிகாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டுச் செல்வார். அம்மாவுக்கும் அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கம் இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
– தனது தாயின் போராட்டத்தை குறிப்பிட்டு பிரதமர் மோதி எழுதுகிறார்: “வீட்டை நடத்த சிறிது பணம் கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் அம்மா மற்றவர்களின் வீட்டு பாத்திரங்களைக் கழுவுவார். நேரம் ஒதுக்கி ராட்டையைச் சுழற்றுவார். இதில் இருந்தும் சிறிது பணம் கிடைக்கும். பருத்தியில் இருந்து பஞ்சு எடுக்கும் வேலை, பஞ்சில் இருந்து நூல் செய்வது, இதையெல்லாம் அம்மா தான் செய்வார். பருத்தி மட்டையின் முட்கள் எங்களைக் குத்திவிடுமோ என்று அவர் பயந்தார்.”
பட மூலாதாரம், narendramodi
– தனது தாயின் வாழ்க்கை முறையைக் குறிப்பிட்ட பிரதமர் மோதி தனது தாயார் ஆரம்பத்தில் இருந்தே தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக எழுதியுள்ளார். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க, அவர் வீட்டிற்குத் தானே வெள்ளையடிப்பார். வீட்டின் சுவர்களில் கண்ணாடித் துண்டுகளை ஒட்டி வடிவங்களை உருவாக்குவார். தனது தாயார் இன்றும் எல்லாமே சரியாக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பிரதமர் குறிப்பிடுகிறார்.
“இந்த வயதிலும் அவருடைய ஒவ்வொரு வேலையிலும் எல்லாமே சிறப்பாக, முழுமையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளது. இப்போது காந்திநகரில் சகோதரர் குடும்பம் உள்ளது. என் சகோதரரின் மகனின் குடும்பம் உள்ளது. இன்றும் தனது எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள என் தாய் முயற்சி செய்கிறார்,” என்று எழுதியுள்ளார்.
– தாய் தனது குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு வாயைத் துடைப்பது போல இன்றும் அம்மா தன்னிடம் அதையே செய்கிறார் என்று பிரதமர் மோதி எழுதியுள்ளார். “நான் அவரைச் சந்திக்க வரும்போதெல்லாம், அவர் நிச்சயமாக எனக்கு இனிப்புகளை ஊட்டுவார். இன்றும் எனக்கு ஏதாவது ஊட்டிவிட்டு, என் அம்மா கண்டிப்பாக கைக்குட்டையால் என் வாயைத் துடைப்பார். அவர் எப்போதும் தனது புடவையில் ஒரு கைக்குட்டை அல்லது சிறிய துண்டு ஒன்றை வைத்திருப்பார்,” என்று கூறியுள்ளார் பிரதமர்.
பட மூலாதாரம், narendramodi
-ஹீராபென் பிரதமரின் தாய். அவர் எப்படி உணர்கிறார், எவ்வளவு பெருமைப்படுகிறார்?
“உங்களுக்கு எத்தனை பெருமையாக உள்ளதோ, அதே அளவு எனக்கும் உள்ளது. எப்படியும் என்னிடம் எதுவும் இல்லை. நான் ஒரு கருவி மட்டுமே. எல்லாம் கடவுளுடையது,” என்று இதைப் பற்றி ஹீராபென் கூறுகிறார்.
“நீங்களும் பார்த்திருப்பீர்கள், எனது அம்மா எந்த அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் என்னுடன் செல்வதில்லை. இதுவரை இரண்டு முறை தான் என்னுடன் பொது நிகழ்ச்சிக்கு அவர் வந்துள்ளார்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் குறிப்பிட்ட பிரதமர், ஏக்தா யாத்திரைக்குப் பிறகு முதன்முறையாக ஸ்ரீநகரில் உள்ள லால் செளக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பியபோது, அகமதாபாத்தில் நடந்த, மக்கள் மரியாதை தெரிவிக்கும் நிகழ்ச்சியின் மேடையில் தனது தாயார் தன் நெற்றியில் திலகமிட்டதாகக் கூறினார்.
“நான் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது அவர் என்னுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தப் பதவியேற்பு விழாதான் அவர் என்னுடன் கடைசியாகக் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி. அதன்பிறகு அவர் என்னுடன் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை,” என்று பிரதமர் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், narendramodi
-தனது தாயார் பெயரில் எந்தச் சொத்தும் இல்லை எனப் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். அவர் தங்கம் எதுவும் அணிவதில்லை.
-நாடு மற்றும் உலக செய்திகளைத் தனது தாயார் நன்கு அறிந்திருப்பதாக பிரதமர் மோதி கூறினார். இருப்பினும், டிவி சேனல்கள் குறித்து அவருக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. “சமீபத்தில், நான் அம்மாவிடம் இந்த நாட்களில் நீங்கள் தொலைக்காட்சியை எந்தளவுக்குப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அம்மா, ‘டிவி பார்த்தால் எல்லோரும் தங்களுக்குள் சண்டையிடுகிறார்கள். சிலர் அமைதியாக விளக்குகிறார்கள். நான் அதை பார்க்கிறேன்’ என்று பதில் அளித்தார்,” என்று பிரதமர் கூறினார்.
-பொது வாழ்வில் இல்லாதவரை தனது தாயார் தன்னை ஒருமையில்தான் அழைப்பார். ஆனால் இப்போது என்னை ‘நீங்கள்’ என்று பன்மையில் அழைக்கிறார் என்று பிரதமர் மோதி கூறினார். “குஜராத்தியில் நீ என்பதற்கு தூ, நீங்கள் என்பதற்கு தமே என்று கூறுவார்கள். நான் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் அம்மா என்னை நீ என்று சொல்லித்தான் பேசுவார். ஆனால் நான் வீட்டை விட்டு வெளியேறி என் பாதையை மாற்றிக்கொண்ட பிறகு அம்மா என்னிடம் நீ என்று சொல்லிப் பேசியதில்லை. இன்றும் என்னை ஆப்(நீங்கள்) அல்லது தமே என்றுதான் சொல்கிறார்,” என்று பிரதமர் எழுதியுள்ளார்.
“டெல்லி உனக்குப் பிடித்திருக்கிறதா, உன் மனதுக்குப் பிடித்திருக்கிறதா என்று அம்மா அடிக்கடி என்னிடம் கேட்பார்,” என்று பிரதமர் மோதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மோதி ஆட்சியின் 8 ஆண்டுகள்: தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: