அதிமுக நெருக்கடி: ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நடத்தும் தனித்தனி சந்திப்புகள் – என்ன நடக்கிறது?

- பிரமிளா கிருஷ்ணன்
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், ADMK
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பெரிய விவகாரமாக எழும் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. வரும் ஜூன்23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை இறுதி செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளனர். இதேவேளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக தங்களுடைய வீடுகளில் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவபதி, எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக இளைஞரணி ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். அணி நிர்வாகிகளும் பழனிசாமியை நேரில் சந்தித்து ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
இபிஎஸ் இல்லத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் சிவபதி, ஒற்றை தலைமைதான் கட்சிக்கு தேவை என்றும் அதற்கு ஓபிஎஸ் ஒத்துப்போவது நல்லது என்றும் வெளிப்படையாக பேசினார்.
”அதிமுகவில் உள்ள இளைஞர்களின் ஆதரவு இபிஎஸ் சுக்குதான் உள்ளது. நான்கு ஆண்டுகள் முதல்வராக அவர் ஆட்சி செய்தபோது, கொரோனா காலத்திலும் சரி, புயல் மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நேரத்திலும் சரி, மக்களை நேரில் சென்று சந்தித்தார். எளிமையான முதல்வராக இருந்தார் என்பதால், கட்சியிலும், மக்கள் மத்தியிலும் அவருக்குதான் செல்வாக்கு உள்ளது. இதை புரிந்துகொண்டு ஓபிஎஸ் ஒற்றைத்தலைமைக்கு ஒத்துப்போவதுதான் சரியாக இருக்கும்,”என்றார் சிவபதி.
இதற்கிடையே, சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும், எஸ்.பி. வேலுமமணி, காமராஜ், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த இருவரை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் இன்று காலை முதல் இரு முறை சந்தித்துப் பேசியுள்ளனர். ஒற்றைத் தலைமை அல்லது இரட்டைத் தலைமை விவகாரத்தில் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி ஒருமித்த கருத்தை எட்டும் சமாதான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெயக்குமார் பேட்டியால் எழுந்த சர்ச்சை
அதிமுக ஆட்சியில் இருந்தபோது முதல்வராக எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் பதவி வகித்தனர். கட்சியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமை ஏற்று செயல்பட்டு வந்தனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை, ஓபிஎஸ்-இபிஎஸ் எல்லா முடிவுகளையும் இணைந்துதான் எடுத்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளதாகவும் பல மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமை என்ற முடிவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினராகவும் அமைப்புச் செயலாளராக உள்ள டி.ஜெயக்குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஜெயக்குமாரின் பேட்டியை அடுத்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமையில் செயல்படுமானால், அதற்கு யார் தலைமை ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை குறித்துப் பேசுவதற்கான தேவையில்லை என்றும் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதால், பொதுச் செயலாளர் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இருதரப்பாக பிரிந்து நடந்த ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், பொதுக் குழுவில் பேசவேண்டிய தீர்மானங்களை முடிவு செய்யும் கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு தரப்பாகப் பிரிந்து ஆலோசனை நடைபெற்றது கவனம் பெற்றது. கூட்டத்திற்கு இபிஎஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பாக மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
அதோடு, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் உடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்குச் சென்ற மூத்த தலைவர்கள் அங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு இடங்களிலும் செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர்கள், பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றிய விவாதத்திற்கு தீர்வு ஏற்படும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்தனர்.
அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட கட்சியில் பல பதவிகளை வகித்துவரும் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை எனத் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் தான் பேசியதில் தவறில்லை என்றார்.
மேலும், ”தொண்டர்களின் மனநிலையை மாவட்ட செயலாளர்கள் பிரதிபலிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரத்தை நான் சொல்லியதில் எந்தத் தவறும் இல்லை. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை எனத் தொண்டர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை பொதுக் குழுவிலும் பேசவேண்டும் என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது. பொதுக் குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்,” என்றார் ஜெயக்குமார்.
”கட்சியில் விளம்பரம் தேடும் நபர்கள்”
பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பொதுக் குழுவில் கொண்டுவரப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக கூட்டத்திற்கு இபிஎஸ் வரவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றார்.
”கட்சியின் பொதுக்குழுவில் எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களை முடிவு செய்வதற்கு நான் உட்பட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழு முடிவுகளை எடுக்கும். அந்தக் கூட்டத்திற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஓபிஎஸ் அவராகவே வந்தார், இபிஎஸ் வருவதாக இருந்தது. அவர் வரமுடியவில்லை எனத் தகவல் சொல்லியனுப்பினார். இதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை,” என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக தொண்டர் ஒருவர் காயமடைந்து வெளியே வந்தது குறித்துக் கேட்டபோது, ”சலசலப்பு ஏற்பட்டு ஒருவர் காயமடைந்தார். இதெல்லாம் கட்சியில் தங்களை விளம்பரம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தும் செயல்கள். கட்சிக்குத் தேவையற்ற செயல்கள் இவை. இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை,” என்றார்.
பொதுக் குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய முடிவு எடுக்கப்படுமா, அதுவும் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளனவா என்று கேட்டபோது, ”பொதுக் குழுவில் வைக்கப்படும் விவாதங்கள் முடிந்த பின்னர் தான் தீர்மானங்கள் வாசிக்கப்படும். இதுதான் நடைமுறை. அதனால் தீர்மானங்கள் இதுவாகத்தான் இருக்கும் எனத் தற்போது சொல்ல முடியாது,” என்றார்.
அதிமுக தலைவர்கள் ஒருபுறம் பொதுக்குழுவுக்குத் தயாராகி வந்தாலும், அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு இந்த விவாதங்கள் மேலும் சலிப்பை ஏற்படுத்திவிட்டதை நாம் பல தொண்டர்களிடம் பேசியதில் இருந்து தெரிந்துகொண்டோம். சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்படுத்தியதைவிட, உள்கட்சி விவகாரம் கட்சித் தொண்டர்களிடம் கசப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒற்றைத் தலைமை பிரச்னை முடிவுக்கு வருமா?
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை பிரச்னைக்குத் தீர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என மூத்த பத்திரிகையாளர் இளங்கோவனிடம் கேட்டோம். ஒற்றைத் தலைமை பிரச்னை எளிதில் தீர்க்கக்கூடியதல்ல என்றும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எனப் பல அடுக்குகளைக் கடந்து வரவேண்டிய பிரச்னை என்றும் கூறுகிறார் இளங்கோவன்.
”ஜெயலலிதா இருந்தவரை அவர்தான் பொதுச் செயலாளராக இருந்தார். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி என்பதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளை உருவாக்கி, அதற்குத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று கட்சியின் சட்ட விதிகளை மாற்றி அமைத்து, பதவிகளை உருவாக்கினார்கள். தற்போது மீண்டும் ஒற்றைத் தலைமை என முடிவு செய்தால், ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பாகப் பிரிந்து நிற்கும் சூழல் ஏற்படும். ஆயினும், கட்சியின் விதிகளுக்கு உட்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்வதை இருவரில் ஒருவர் தேர்வு செய்யலாம். மீண்டும் கட்சியின் விதிகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு காலம் அதிகம் தேவைப்படும். பொதுக் குழுவில் முடியும் பிரச்னையாக இது இருக்காது,” என்கிறார் இளங்கோ.
அதோடு, ஓபிஎஸ் இரட்டை தலைமை தேவை எனப் பேசினாலும், இதுவரை இபிஎஸ் தனது கருத்தைச் சொல்லாமல் இருப்பது குறித்துக் கேட்டபோது, ”அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு சில எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். பெரும்பாலான எம்எல்ஏக்கள் இபிஎஸ்க்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. முதல்வராக இருந்தபோது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்திருந்தார்.
அதனால், கொங்கு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் இபிஎஸ் தனக்கான நபர்களை ஒன்று சேர்த்துள்ளார். ஆனால் ஓபிஸ்க்கு தென் மாவட்டங்களில் கூட ஆதரவாளர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனால்தான், ஓபிஎஸ் இரட்டை தலைமை தேவை என்கிறார். இபிஎஸ் எதுவும் பேசாமல், தனக்கான ஆட்களைச் சேர்த்து பலத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்,” என்கிறார் இளங்கோவன்.
மேலும் ஒற்றைத் தலைமை என்ற பிரச்னையால் அதிமுகவில் பிளவு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்கிறார் அவர். ”ஒற்றைத் தலைமை பிரச்னைக்குத் தீர்வு என்பது தற்போது பிறக்காது என்றாலும், இந்த சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்தால், கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. இந்த சர்ச்சைகள் காரணமாக ஏற்கனவே அமமுக என்ற பிளவு ஏற்பட்டது போல, மற்றொரு அணி உருவாகலாம்,” என்கிறார் இளங்கோவன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: