விஸ்வநாதன் ஆனந்த் பிரத்யேக பேட்டி – “செஸ் விளையாட்டுப் பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு உதவும்”

- சரண்யா நாகராஜன்
- பிபிசி தமிழ்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை இந்தப் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட `சுடர் ஓட்டம்’ எனும் நிகழ்ச்சி இந்தாண்டு அறிமுகமானது. பிரதமர் நரேந்திர மோதி, ஜூன் 19 டெல்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் இந்த சுடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்காடி ட்வோர்கோவிச் போட்டிக்கான ஜோதியை பிரதமரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த ஜோதியை இந்தியாவின் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் கைகளில் அளித்தார். இந்த ஜோதி இந்தியா முழுவதும் 75 இடங்களுக்குச் சென்று ஒலிம்பியாட் நடைபெறும் இடமான மகாபலிபுரத்தில் முடிவடையும்.
இந்த ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தனது மிகப்பெரிய குழுவை களமிறக்குகிறது. இந்நிலையில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவரது தொடக்க காலம் முதல் செஸ் ஒலிம்பியாட் வரை பல்வேறு விசயங்கள் தொடர்பாக பிபிசி தமிழ் செய்தியாளர் சரண்யா நாகராஜனிடம் பேசினார். பேட்டியில் இருந்து…
அம்மா தான் செஸ் விளையாட்டை உங்களுக்கு அறிமுகப்படுத்தினார் என்று பல நேர்காணல்களில் தெரிவித்து இருக்கிறீர்கள். அம்மாவுடன் தொடங்கிய செஸ் பயணம் குறித்து சொல்லுங்க?
ஆறு வயது இருந்தபோது அக்கா, அண்ணா இருவரும் செஸ் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது நான் அம்மாவிடம் சென்று எனக்கும் இந்த விளையாட்டை கற்றுக்கொடுங்கள் என கூறினேன். அம்மாவும் கற்றுக் கொடுத்தார்கள். முதலில் நிறைய விசயங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது. நான் மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். எனக்கு இது பிடித்திருக்கிறது என உணர்ந்த அம்மா சென்னையில் உள்ள செஸ் கிளப்பில் என்னை சேர்த்துவிட்ட்டார். பின்னர் அதற்கான பயிற்சிகளில் தவறாமல் கலந்துகொண்டேன். அடுத்த நாள் செஸ் விளையாட செல்லவேண்டுமென்றால் முதல் நாளே வீட்டுப்பாடங்களை முடித்துவிடுவேன். பின்னர் பணி நிமித்தமாக அப்பா பிலிப்பைஸ்-க்கு ஒரு ஆண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கு எனக்கு செஸ் விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது. அப்போது பிலிப்பைன்ஸில் செஸ் மிகவும் பிரபலமாக இருந்தது. அங்குள்ள தொலைக்காட்சிகளில் செஸ் விளையாட்டு குறித்து அதிகமாக பார்க்க முடியும். தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் செஸ் தொடர்பான புதிர்களை எனக்காக அம்மா எடுத்து வைப்பார். பள்ளி முடிந்து வந்ததும் அதனை அவருடன் சேர்ந்து தீர்க்க முயற்சிப்பேன். அந்நாட்டில் பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததால் அதன் மீதான எனது ஆர்வமும் கவனமும் எனக்கு அதிகரித்தது. அங்கிருந்து வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜூனியர் பிரிவில் சிறந்து விளையாடத் தொடங்கினேன்.
”Chess is a mind game” அப்படின்னு பலரும் சொல்லுவாங்க. செஸ் மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு தானா? உங்களது பார்வையில் செஸ் விளையாட்டு என்பது என்ன?
நிச்சயமாக!!! அது மனம் சார்ந்து விளையாட்டுதான். 2 அல்லது 3 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து அது குறித்து யோசிக்க வேண்டும். அது குறித்த திட்டங்களை வகுத்து கொண்டே இருக்க வேண்டும். அதே நேரத்தில் இதுவும் உடல் சார்ந்த விளையாட்டை போன்றதுதான். சில மணி நேரங்களில் மனம் மட்டுமின்றி உடலும் சோர்வு பெறும். அதன் காரணமாக விளையாட்டில் உங்களது செயல்பாடுகள் (performance) குறையலாம். எப்போது எதனை செய்ய வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும். பின்னர் அதனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தேவைப்படும் போது எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி பெற்றுக் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் செஸ் விளையாட்டு வீரர்கள் மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க முடியும்.
இளம் வயதில் உங்களது மனதை ஒருமுகப்படுத்த எந்த மாதிரியான பயிற்சிகளை செய்தீர்கள்?
தொடர்ந்து செஸ் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டேன். மனதளவிலான பயிற்சி மட்டுமல்ல. செஸ் விளையாட்டை தொடர்ந்து பயிற்சி செய்யும் போது தானாகவே மனம் ஒருமுகப்படுத்தபடும். புத்தகம் படிக்கும்போது யோசனை செய்து கொண்டே இருப்பேன். மற்றவர்கள் எத்தகைய வகையில் விளையாடுகிறார்கள்? எப்படி காய் நகர்த்துகிறார்கள்? ஏன் நம்மால் அதனை சரியாக செய்யமுடியவில்லை. இன்னும் மேம்பட்டு விளையாட என்ன செய்யலாம் போன்ற விஷயங்களை யோசித்துக் கொண்டு இருப்பேன். ஒரு விளையாட்டில் இதை விட மேலும் சிறப்பாக காய்களை எவ்வாறு நகர்த்த முடியும்? அதனை வேறு யாரும் இதற்கு முன்னர் செய்துள்ளார்களா என ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு யோசித்ததன் மூலம் அதனை செய்து பார்க்க முடிந்தது.
முதல் முறையாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இது எவ்வளவு முக்கியமானது?
இது மிகவும் முக்கியமானது. இந்தியாவிலேயே நடைபெறும் முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிலும் நமது தமிழகத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நமது போட்டி என்று கூட சொல்லலாம். இத்தகைய பெரிய அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் ஆசியாவிலேயே நடந்து நீண்ட காலமாகிவிட்டது. இந்த வாய்ப்பு மிகவும் முக்கியமானது செஸ் குறித்து இந்த குறுகிய காலத்தில் எத்தனை பேர் தெரிந்து கொள்ள போகிறார்கள் என்பதும் முக்கியமானது. அதற்கான நேரமும் நமக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. நம்மிடம் தற்போது மூன்று முக்கிய வலிமையான அணியினர் உள்ளனர். செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் அற்புதமான இளம் வீரர்கள் நம்மிடம் உள்ளனர். மேலும் இந்தியாவில் செஸ் விளையாட்டில் வலிமையான பல வீரர்கள் உள்ளனர். இந்தியாவில் 73 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். இத்தகைய அடிப்படையை வைத்துக்கொண்டு நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விஷயங்களை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். இத்தகைய போட்டியை நடத்த பொதுவாக இரண்டு ஆண்டுகள் திட்டமிட வேண்டும். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் தமிழக அரசு அதனை செய்து உள்ளது. நிச்சயமாக! இந்த போட்டிகள் செஸ் விளையாட்டிலும் சரி, தமிழகத்திலும் சரி ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
இளம் வீரர்கள் குறித்து தாங்கள் குறிப்பிட்டீர்கள். மேலும் பல இளம் வீரர்களை உருவாக்க அரசு சார்பில் எத்தகைய ஊக்குவிப்பு தேவைப்படுகிறது?
கிராமங்களிலிருந்து வரும் வீரர்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் சில வசதிகள் மற்றும் நிதி உதவிகளை விளையாட்டுத்துறை செய்தாலே போதுமானது. ஏற்கனவே தமிழகத்தில் அதற்கான அடிப்படை உள்ளது என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் ஏற்கனவே அதற்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆர் பி ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம். தமிழக அரசு அவர்களுக்கு சரியான வகையில் ஆதரவு அளித்தால் நம்மால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும்.
கிரிக்கெட் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளை பொருத்தவரை அதற்கான அடுத்த நிலைகளை எவ்வாறு அடைய வேண்டும்? பயிற்சிகளை எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்த புரிதல் நமது நாட்டில் உள்ளது. செஸ் விளையாட்டை பொருத்தவரை அத்தகைய புரிதல் உள்ளது என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக உள்ளது!!! ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஒரு நிலையை எப்படி கடப்பது? அடுத்த நிலையை எவ்வாறு அடைவது என தெரிந்து கொள்ள முடிகிறது. தற்போது செஸ் விளையாட்டை பொருத்தவரை கணினியின் உதவி மிகவும் தேவைப்படுகிறது. இன்டர்நேஷனல் மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர் ஆன பிறகு அடுத்தடுத்த வழிகள் தானாக கிடைத்து விடுகிறது. இதன் மூலம் வேர்ல்ட் சாமபியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும். செஸ் விளையாட்டை பொறுத்தவரை இதுதான் மிகவும் இயற்கையான வழி. சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒவ்வொரு நிலையையும் கடக்கும் போதே நாம் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். நான் அவ்வாறு தான் பல விசயங்களை அறிந்துகொண்டேன். மேலும் பள்ளிகளில் மாணவர்களிடையே செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வை கொடுத்து அதனை விளையாட ஊக்குவிப்பதன் மூலம் பல்வேறு இளம் வீரர்களை உருவாக்க முடியும். மாநில அளவில் தற்போது உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்வதும் சிறந்த வழியாகும்.
தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்வி கொள்கை குழுவில் நீங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழுவில் தாங்கள் குறிப்பாக விளையாட்டு சம்பந்தமாக எத்தகைய பரிந்துரைகளை வழங்குகிறீர்கள் ?
முதலில் விளையாட்டு வீரர்களுக்கு நிதி அளவிலும் சரி, போட்டிகளுக்கான பயணம் தொடர்பான உதவிகள் ஆக இருந்தாலும் சரி, இத்தகைய விஷயங்களை செய்து கொடுக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளேன். மேலும் செஸ் விளையாட்டை பொருத்தவரை அதனை கல்வியுடன் கலந்து விட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள். இது தொடர்பான சிறு சிறு நுணுக்கங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என அவர்கள் யோசித்துக்கொண்டே இருக்கும்போது அது கல்வியிலும் பிரதிபலிக்கிறது. கல்வியைப் பொருத்தவரை செஸ் விளையாட்டை ஒரு கருவி போல பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும். அதுவே எனது பரிந்துரையாக உள்ளது
செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அது செஸ் விளையாட்டை பொருத்தவரை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் மக்கள் இரு மனிதர்கள் (வீரர்கள்) விளையாடுவதை விரும்புவார்களா? செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரும்புவார்களா?
விளையாட்டைப் பொறுத்த வரை இரண்டு வீரர்கள் அதாவது மனிதர்கள் விளையாடுவதையே மக்கள் விரும்புவார்கள். இரண்டு கணினிகள் விளையாடுவதை பார்ப்பதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. மிக நுணுக்கமான அறிவு கொண்ட செஸ் விளையாட்டு வீரராக இருந்தால் இரண்டு கணினிகள் விளையாடும் போது ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என அதனை கவனிப்பார்கள். விளையாட்டு தொடர்பான ஆர்வம் அதில் இருக்காது. பொதுவாக, இரண்டு வீரர்கள் விளையாடும் போது இவர் நமது நாட்டு வீரர் எதிரியை எவ்வாறு வீழ்த்துகிறார் என்பதை பார்க்க மக்கள் விரும்புவார்கள். ஆனால் விளையாட்டு தொடர்பான பயிற்சிகளைப் பெற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது, முக்கியமானது. தற்போது உள்ள தொழில்நுட்ப அறிவின் மூலமாகவே செஸ் விளையாட்டு தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை தற்போது புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு புதுவிதமான புரிதல். நான் தொடக்க காலத்தில் பயின்ற விளையாட்டு முறையை நிறைய மாற்ற வேண்டி இருந்தது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டை தொடங்கியபோது நான் செய்த விஷயங்களை இப்போது செய்ய முடியாது ஏனெனில் புதிய தொழில்நுட்பங்கள் அவற்றை மேம்படுத்தி விட்டன. அனைத்து முடிவுகளும் மாறிவிட்டன. இவ்வளவு தொழில்நுட்ப அறிவுகளை செயற்கை நுண்ணறிவு கொடுத்தாலும் கூட இரண்டு மனிதர்கள் விளையாடும்போது அதை அவர்களது விளையாட்டில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதே ரசிக்கக் கூடியதாக இருக்கும். எதிர்காலத்திலும் அது பாதுகாக்கப்படும் எனவும் நான் நினைக்கிறேன்.
ஐபிஎல் கிரிக்கெட் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து என கிரிக்கெட் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அத்தகைய வகையில் செஸ் விளையாட்டை பொருத்தவரை எவ்வாறான மாற்றங்கள் வர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
செஸ் விளையாட்டிலும் அத்தகைய முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஃபார்மட்டுகளை(formats) பொறுத்த வரை ஐந்து மணி நேரம் ஆறு அல்லது 7 மணி நேரம் என கிளாசிக் (classic) செஸ் விளையாட்டு முறைகள் இருந்தன. பின்னர் ராபிட்(rapid) செஸ் விளையாட்டு முறையை பொருத்தவரை அது ஒரு மணி நேரத்தில் முடிவு பெறும். கிரிக்கெட்டில் உள்ள டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போல என அதனை வைத்துக் கொள்ளலாம். பிளிட்ஸ்(blitz) என அழைக்கப்படும் செஸ் விளையாட்டு முறை ஒரு வீரருக்கு ஐந்து நிமிடங்கள் மூன்று நிமிடங்கள் ஒரு நிமிடம் என கணக்கு வைத்து விளையாடுவது. அதில் எவ்வளவு வேகமாக விளையாட்டை முடிக்க முடியும் என யோசிக்க வேண்டும். நேரம் குறைய குறைய அது ஒருவித பதற்றத்தை கொடுக்கும். யோசிக்க முடியாது. உள்ளுணர்வின் அடிப்படையில் எது சரியான நகர்தல் என முதலில் தோன்றுகிறதோ அது அதனை செய்துவிட வேண்டும். ஏனெனில் நேரம் குறைந்து கொண்டு வருவதால் அது ஒருவிதமன பயிற்சி பிளிட்ஸ்(blitz) விளையாடுபவர்கள் நேரம் தொடர்பாக பயிற்சி பெறுவதன் மூலம் கிளாசிகல் செஸ் விளையாட்டில் அதனை செய்து பார்க்க முடிகிறது. புள்ளி கணக்குகளில் வகையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. முதலில் 1 – ½ – 0 அதாவது வெற்றி முடிவில்லை தோல்வி என அறியலாம். இப்போது 2 – 1 – 0, 3 – 1 – 0, 3 – 1/2 – 0. இத்தகைய வகையில் புள்ளி கணக்குகளில் புது மாற்றங்களை செய்து வரலாம். புது முயற்சிகளுக்கு முடிவே இல்லை. எவ்வாறு ஒரு போட்டியை சுவாரசியம் அளிக்கக்கூடியதாக மாற்றமுடியும், அதனை நிலையானதாக எவ்வாறு வைத்திருக்க முடியும். அத்தகைய முயற்சிகள் செஸ் விளையாட்டை பொறுத்தவரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
நான் சிறுவயதில் பார்த்த விஸ்வநாதன் ஆனந்த் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே அதே தோற்றத்தில் இன்றும் இருக்கிறார். அது எப்படி? உங்கள் இளமையின் ரகசியம் என்ன?
மகிழ்ச்சியாக இருக்கிறேன். நன்றாக உறங்குகிறேன். எனக்கான தினசரி உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கிறேன். 50 வயதை கடந்து விட்டதால் சில விஷயங்களை பழைய நிலையைப் போல தொடர்வது அவ்வளவு சுலபமானதல்ல. இப்போது தொடர்ந்து விளையாடும்போது எனக்கும் சில நேரங்களில் அயற்சி ஏற்படுகிறது அதில் எந்த ரகசியமும் இல்லை தொடர்ந்து அவ்வாறு இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: