QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள்

- ஹேமா ராக்கேஷ்
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images
QR குறியீடுகள் வாயிலாக நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் உலகில் தொடரந்து நடைபெற்று வருகின்றன. நம்மில் பெரும்பாலோனோர் டிஜிட்டல் பேமென்ட் முறையைப் பயன்படுத்துவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம்.
பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தகவல்களை அறிய நாம் பயன்படுத்தும் QR குறியீடு மூலம் மோசடிகள் அரங்கேறுகின்றன. QR குறியீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது இந்த மோசடியை எப்படித் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
QR குறியீடு என்றால் என்ன?
QR என்பது Ouick response என்பதைக் குறிக்கிறது. இது ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டென்சோ வேர் மூலம் 1994 இல் உருவாக்கப்பட்டது. இது மேட்ரிக்ஸ் பார் குறியீடு. இதை மிஷின் மூலம் படிக்க முடியும். இந்தக் குறியீடு ஒரு பொருள், சேவை மற்றும் ஒரு நிறுவனம் குறித்துத் தேவைப்படும் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும்.
தொழில்நுட்ப விஷயங்களை அடையாளம் காண, கண்காணிக்க அல்லது பிற தகவல்களுக்காக உங்களைச் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு அனுப்பவும் இது பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, காரில் உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்தால், காரின் செயல்பாடு தொடர்பான தகவல்கள் தெரியத் தொடங்கும். கார் அதன் உற்பத்தி செயல்முறையின் போது கடந்து வந்த நிலைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கும். இந்த QR குறியீடு உங்களை காரின் இணையதளம் வரையிலும்கூட அழைத்துச் செல்லும். இதனால் இருந்த இடத்தில் இருந்தே அதிக தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
QR குறியீடு பயன்கள் என்ன?
கார் உற்பத்தித் துறையில் இருந்து இதை, மற்ற தொழில்களும் விரைவில் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்டன. இதன் மூலமாகக் கிடைக்கும் வசதி, இதை ஏற்றுக் கொள்வதில் ஓர் உந்துதலாக அமைந்தது. UPC பார் குறியீட்டை விட (மேலிருந்து கீழ் நோக்கி வரும் நேரான அகலமான கோடுகள்) அதிகமான தகவல்களை இதில் சேமிக்க முடியும். ஜப்பானில் உள்ள கல்லறைகளிலும் QR குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன் எல்லா இரங்கல் செய்திகளும் உங்கள் மொபைல் ஃபோன் திரையில் வந்துவிடும்.
QR குறியீட்டில் நமது வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்ட் விவரங்களை உருவாக்கி பணம் செலுத்துபவருக்கும் வேலை செய்யும் வகையில் இதை வடிவமைக்கலாம்.
பொதுவாக யாருக்காவது பணம் அனுப்ப வேண்டுமென்றால், அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களை நாம் கேட்போம். அந்தக் கணக்கு எண்ணை உங்கள் கணக்குடன் இணைத்து பின்னர் பணத்தை அனுப்புவோம். ஆனால் அந்தக் கணக்கின் QR குறியீடு இருந்தால், அதை ஸ்கேன் செய்தவுடன் நீங்கள் பணம் அனுப்புபவர் அல்லது சேவை நிறுவனத்தின் முழு விவரங்கள் நமக்குக் கிடைக்கும். அதன் பிறகு உடனடியாக நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பலாம்.
QR குறியீட்டில் என்ன மோசடி நிகழும்?
QR குறியீடுகள் நமக்கு ஏற்றவாறான வசதிகளை வழங்குகின்றன. ஆனால் தவறுகள் மற்றும் மோசடிக்கான வாய்ப்பும் இதில் அதிகளவில் உள்ளது. QR குறியீடுகள் மூலம் பல வகையான சைபர் குற்றங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
உங்கள் வங்கியில் ஏதாவது தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றால், நீங்கள் ஓ.டி.பி-யை யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் யாருக்காவது பணம் அனுப்பும்போது, உங்களுக்கு வந்த ஓ.டி.பி-யை நீங்கள் உள்ளிட்டு உறுதிசெய்ய வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
உங்கள் கணக்கில் பணம் பெற வேண்டுமானால், எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு கணக்கில் பணம் செலுத்தும் போது மட்டுமே QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டால், இதுபோன்ற மோசடி வலையில் சிக்காமல் இருப்பீர்கள். தெரியாதவர்கள் அனுப்பும் க்யூஆர் கோட் லிங்கை ஸ்கேன் செய்வதற்கு முன் நாம் எப்படி கவனமாக இருக்கிறோமோ அதே போல, அது எங்கிருந்து உருவானது அதாவது அது எங்கிருந்து வந்தது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சில சைபர் கிரிமினல்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, குறியீட்டில் உடனடியாக மாற்றங்களைச் செய்கிறார்கள். அதை எளிதில் கண்டுபிடிக்கமுடியாது. இந்த வழியில் அவர்கள் ஒரு புதிய கணக்கைத் திறக்கிறார்கள். கடைகளில் இந்த வகையான குறியீடு நிறுவப்பட்டால், வாங்குபவர் செலுத்தும் பணம் கடைக்காரருக்குச் சென்றடையாது, மேலும் வாங்குபவரும் பாதிக்கப்படுகிறார்.
எனவே ஸ்கேன் செய்வதற்கு முன் QR குறியீட்டை சரிபார்க்கவும். QR குறியீடு என்ற போர்வையில் உங்கள் கணினியில் சில malware நிறுவப்படலாம். இதனால் உங்கள் கணினிகளில் உள்ள தகவல்கள் திருடப்படலாம். அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களால் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட QR குறியீடு சேவையை மட்டும் பயன்படுத்துவது நல்லது.
பட மூலாதாரம், Getty Images
QR குறியீடு மோசடிகளில் மக்கள் எப்படி சிக்குகிறார்கள்?
சமூக இணையதளங்களில் பொருட்களை வாங்குபவர்கள் இந்த மோசடிகளில் சிக்குகிறார்கள். குறிப்பாக பாதுகாப்பு அதிகம் இல்லாத இணையதளங்களை பொருட்கள் வாங்கப் பயன்படுத்தும் போது, இறுதியில் பணம் செலுத்துவதற்குக் குறிப்பிட்ட QR குறியீடு மூலமாக பணம் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் செலுத்தினால் அட்டகாசமான ஆஃபர் என்று அவசரப்படுத்துவதால் மக்கள் QR குறியீடு விவரங்களைச் சரிபார்க்காமல் உடனடியாக பணத்தைச் செலுத்திவிடுகிறார்கள். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டது மக்களுக்குத் தெரியவருகிறது. அதனால் டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்துவதற்கு SSL சான்றிதழ் அல்லது டொமைளில் “https “இல்லாத இணையதளங்களில் இருந்து பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
அடுத்து நம்முடைய கைபேசி எண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிசு கிடைத்திருப்பதாகவும் உங்களுக்கு ஒரு பரிசுப்பொருள் காத்திருப்பதாகவு சொல்லி, அனுப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்யமாறு குறுஞ்செய்தி வரும். அதில் கூறும்படி செய்தால் நாம் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.
QR குறியீடு பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியது என்ன?
QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன், எதிர் தரப்பினரின் விவரங்களைச் சரிபார்க்கவும். விவரங்களை உறுதி செய்த பின்னரே பணம் செலுத்தவும். ஸ்கேனர் அல்லது அவற்றின் குறியீட்டில் ஏதேனும் பிழை இருந்தால் உடனடியாக இது உங்களுக்கு தெரியவரும்.
பட மூலாதாரம், Getty Images
உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டதை உறுதிசெய்த பிறகு, செலுத்தப்படவேண்டிய நபருக்குப் பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, அது சென்றடைய வேண்டிய நபரை அடையவில்லை என்றால், சம்பந்தப்பட்ட செயலி மூலம் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். இது இழப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
QR குறியீடு விஷயத்தில் மட்டுமல்ல, எந்தவொரு டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையிலும் அவசரம் காட்டக்கூடாது. பணம் சென்றடையச் சிறிது நேரம் ஆகும்.
QR குறியீடு, பொதுவாக எல்லா கட்டண செயலிகளிலும் இருக்கும். இது தவிர, QR குறியீட்டை ஸ்கேன் செய்ய சில சிறப்பு செயலிகளும் உள்ளன. ஆனால் அவற்றைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன், அந்த செயலிகளின் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வுகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். நீங்கள் முழுமையாகத் திருப்தி அடைந்த பிறகே இந்த செயலிகளைப் பதிவிறக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற செயலிகள் மோசடிக்கு வழி வகுக்கக்கூடும்.
சூரிய ஒளியால் படம் வரையும் மயிலாடுதுறை இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: