சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு – கேரளா இடையே என்ன சிக்கல்?

- மோகன்
- பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் பங்கு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாடு – கேரள அரசுகளுக்கு இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சமீபத்தில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் கோவை வந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு, கேரள அரசு சிறுவாணியிலிருந்து உரிய அளவில் தண்ணீர் வழங்குவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
ஜூன் 19ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், `சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்திப் பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் உத்தரவிட வேண்டும்` என தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை தொடர்ந்து சிறுவாணி அணையில் வழங்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வரின் ட்வீட்டிற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகபட்சம் வெளியேற்ற அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் முதல்வர் அளவிலான சந்திப்பின் மூலம் அடுத்த கட்டம் விவாதிப்போம் என பதிலளித்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், `ஒத்துழைப்பு மற்றும் தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண எதிர்நோக்கியுள்ளேன். இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியடைவதை நாம் உறுதி செய்வோம்,` என்றுள்ளார்.
சிறுவாணி திட்டம் எப்போது உருவாக்கப்பட்டது?
பிபிசி தமிழிடம் பேசிய கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் இளங்கோவன், `கோவையில் முதல் குடிநீர் திட்டமான சிறுவாணி திட்டம் கடந்த 1929-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகராட்சியால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முதல் குடிநீர் திட்டம் சிறுவாணி தான். அப்போது மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்படவில்லை.
1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சிறுவாணி அணை கேரளா வசம் சென்றது. ஆனால் அதன் பயன்பாடு தமிழ்நாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுவாணி அணை பராமரிப்புக்கான கட்டனத்தை தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள அதே சிக்கல் தான் சிறுவாணியிலும் உள்ளது. 1973-ம் ஆண்டு தமிழ்நாடு – கேரளா இடையே சிறுவாணி குடிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெயில் காலங்களிலும், மழை பொய்த்துவிடும் போதும் சிறுவாணியில் குடிநீர் பெறுவது சிக்கலாகி விடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இரு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதற்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காணப்பட வேண்டும்,’ என்றார்.
ஒப்பந்தம் என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய கோவை குடிநீர் வடிகால் வாரியத்தின் சிறுவாணி பிரிவு நிர்வாக பொறியாளர் மீரா, “சிறுவாணி அணை கட்டப்பட்டதே தமிழ்நாட்டின் குடிநீர் தேவைக்காக தான். தற்போது அதன் கட்டுப்பாடு கேரள அரசிடம் உள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்படுகிறது. சிறுவாணி அணையின் நீர், பாசனத்திற்கு பயன்படுவதில்லை,” என்கிறார்.
கேரள அரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிறுவாணியிலிருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 304 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு (1 ஜூலை முதல் 30 ஜூன் வரையிலான காலகட்டத்தில்) 1.30 டி.எம்.சி குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட குடிநீரின் அளவு முழுமையாக வழங்கப்படவில்லை என முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 300 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த அளவு ஜனவரியிலிருந்து (ஜனவரி – 237 கோடி லிட்டர், பிப்ரவரி – 179 கோடி லிட்டர், மாட்ச் 179 கோடி லிட்டர், ஏப்ரல் – 162 கோடி லிட்டர், மே – 161 கோடி லிட்டர்) படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
மே மாதம் வழங்கப்பட வேண்டிய குடிநீர் அளவில் பாதியே வழங்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் குடிநீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். ஆனால் கடந்த காலங்களில் இந்த அளவுக்கு குறைந்ததில்லை. ஜனவரி மாதத்திலிருந்து கேரள அதிகாரிகள் குடிநீர் வழங்கும் அளவை குறைத்தனர். ஆனால் அதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசின் கோரிக்கை என்ன?
கோப்புப்படம்
இரு மாநில ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணை 878.5 மீட்டர் கொள்ளளவில் தண்ணீரை பராமரிக்க வேண்டும். ஆனால் கேரள அர்சு 877 மீட்டர் அளவில் தான் தண்ணீரை பராமரிக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 122 மெட்ரிக் கன அடி தண்ணீர் பற்றாக்குறை ஆகிறது. எனவே தண்ணீர் அளவை ஒப்பந்தத்தில் உள்ள நிலையில் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு கேரள அரசிடமிருந்து அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை. அதிகாரிகள் தரப்பிலான பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. அப்போது இந்த கோரிக்கை விரிவாக விவாதிக்கப்பட உள்ளது` என்கிறார் சிறுவாணி பிரிவு நிர்வாக பொறியாளர்.
கேரளாவின் பதில் என்ன?
இது தொடர்பாக கேரள அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், `சிறுவாணி ஒப்பந்தம் தான் 1973-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அணை அதற்கு முன்பே கட்டப்பட்டுவிட்டது. மதகுகள் கடுமையாக பழுதடைந்துள்ள நிலையில் அணையும் பலவீனமடைந்துள்ளது. அதனால் தான் முழு கொள்ளளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. பல இடங்களில் கசிவுகள் ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசிடம் இதை முறையாக தெரிவிக்க உள்ளோம்.
ஆனாலும் தண்ணீரை முறையாக வழங்கி வருகிறோம். தற்போது வரை 1.15 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 1.30 டி.எம்.சி வழங்கப்பட்டுவிடும். சிறுவாணி அணையால் கேரளாவுக்கு எந்தப் பலனும் இல்லை. கோவையின் குடிநீர் தேவைக்காக தான் சிறுவாணி அணை உள்ளது.
சிறுவாணி அணை தொடர்பான கூட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்ட முடியவில்லை. இந்த கூட்டம் கூடிய விரைவில் நடத்தப்படும். அப்போது இந்த விவாகரங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்` என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: