“பள்ளிகளில் போதைப்பொருள் கண்காணிப்புக் குழு” – என்சிபி நடவடிக்கை


பட மூலாதாரம், Getty Images
பள்ளிகளில் போதைப்பொருள் கண்காணிப்புக் குழு
(இன்றைய நாளில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்களில் வெளிவந்த முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பதற்காக பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய போதைப் பொருள் தடுப்புத்துறை மற்றும் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜூன் மாதம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (என்சிபி) மண்டல இயக்குநர் அரவிந்தன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தன், பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அதன்படி பள்ளிகளில் போதைப் பொருளுக்கு எதிரான கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கண்காணிப்புக் குழுவில் கவுன்சிலர், ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகிய 4 பேர் இடம் பெறுவார்கள் எனவும் பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் இந்தக் குழு பெரும் உதவியாக இருக்கும் எனவும் அரவிந்தன் கூறினார்,” என்கிறது அந்த நாளிதழ் செய்தி.
“பணி நிமித்த விமானப் பயணங்களில் குறைந்த கட்டணத்தைத் தேர்ந்தெடுங்கள்”
மத்திய அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், குறைவான கட்டணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளதாக, இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், பால்மர் லாரி அன்ட் கோ, அசோக் டிராவல் அன்ட் டூர்ஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகிய 3 பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே டிக்கெட் வாங்க வேண்டும். இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட துறைகள் செலுத்தும்.
இது தொடர்பான விதிமுறையில் மத்திய நிதியமைச்சகத்தின் செலவின துறை சில மாற்றங்களைச் செய்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இது குறித்து வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மத்திய அரசு ஊழியர்கள் அரசு முறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், தங்களின் பயணத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட வகுப்பில் குறைவான கட்டணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும் பயண நாளுக்கு 21 நாள் முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கட்டணம் குறைவாக இருக்கும். இதனால் அரசுக்கு செலவு மிச்சமாகும். பயண நேரத்திலிருந்து 72 மணி நேரத்துக்குக் கீழாக டிக்கெட் முன்பதிவு செய்தாலோ, 24 மணி நேரத்துக்குக் குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தாலோ, சம்பந்தப்பட்ட அதிகாரி சுய விளக்கம் அளிக்க வேண்டும். அதிகாரிகள் குழுவாகப் பயணிக்க வேண்டியிருந்தால், அனைவருக்கும் ஒரே பயண ஏற்பாட்டாளரிடம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு சேவை கட்டணம் எதுவும் வழங்கக் கூடாது.
அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த 72 மணி நேரத்துக்குள் அது தொடர்பான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பயணம் முடிந்த 30 நாட்களுக்குள் பயண ஏற்பாட்டாளர்களுக்கு உரிய தொகையை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் வழங்கவேண்டும். பயண ஏற்பாட்டாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் இருந்தால் அதை வரும் ஆகஸ்ட் 31-க்குள் வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பு, சில பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு, ஏழைகளுக்கு இலவச உணவுப்பொருள் உள்ளிட்டவற்றால் அரசின் செலவு அதிகரித்துள்ளது. எனவே, தேவையற்ற செலவைக் குறைக்கவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை: அடுத்த வாரம் முதல் பாரிய போராட்டம்
மக்களை தொடர்ந்து இன்னல்களுக்குள் தள்ளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேற்குறிப்பிட்ட விடயத்தை ஊடகங்களுக்கு அறிவித்தார்.
தற்போது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்தாலோசித்து, வெகு விரைவில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்று (20) விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
“பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை”
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியில், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களோடு ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் அதிகரித்திருப்பதாக காவல் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்திருப்பதும் கூடுதல் கவலையளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களே நடக்காத சூழலை ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும்.
பாலியல் சீண்டல் ஆபத்துகள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு விழிப்புணர்வூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: