பெருங்குடி குப்பைக் கிடங்கு: அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு, தீராத உடல்நல பாதிப்புகள் – மலைப்போல் குவியும் குப்பையால் தவிக்கும் மக்கள்


  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பட மூலாதாரம், Save Pallikaranai wetland

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அன்றாட கழிவுகள் கொட்டப்படும் பெருங்குடி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதும், மாசுபாட்டால் பெருங்குடி அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள நீர்நிலைகள் ‘ரோஸ்’ நிறமாக மாறும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக சென்னை மாநகரத்தின் குப்பைகளை சுமந்து நிற்கும் பெருங்குடி குப்பைக்கிடங்குக்கு அருகில் வசிக்கும் பலரும் சுவாசக்கோளாறு காரணமாக நிரந்தரமாக நோயாளியாக மாறிவிட்டதாக கலங்குகின்றனர்.

தினமும் சுமார் 4,000 டன் கழிவுகள் பெருங்குடி குப்பைக்கிடங்குக்கு கொண்டுவரப்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கலந்து கொட்டப்படுவதால், குப்பைக்கிடங்களில் சேர்ந்துள்ள குப்பை மேடுகளில் அவ்வப்போது தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும். இந்த ஆண்டு தீ விபத்தோடு, பள்ளிக்கரணை நீர்நிலையில் இரண்டு முறை தண்ணீர் நிறம் மாறிய சம்பவங்களும் நடந்துள்ளதால், அச்சத்தில் இருப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பெருங்குடி குப்பைக்கிடங்கில் ‘பயோமைனிங்’ என்ற குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்றும் வேலைகள் நடந்து வருவதாக கூறும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், காற்று மாசுபாடு அதிகரிக்கும் நேரத்தில் மருத்துவ முகாம்கள் செயல்படுவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெருங்குடி அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா மேலும் வளப்படுத்தப்பட்டு, குப்பைக்கிடங்கால் ஏற்படும் மாசுபாடு குறைக்கப்படும் என்கிறார் பிரியா ராஜன்.Source link

Leave a Reply

Your email address will not be published.