வீடுகளில் ஆர்டலிகளை பயன்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் அதிரடி


காவலர்கள்

பட மூலாதாரம், Getty Images

‘காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்ட ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர், தனக்கு ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பு இல்லத்தைக் காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கைக் கடந்த 14 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், மனுதாரர் இடத்தைக் காலி செய்யவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அந்த இடத்தை இந்த ஆண்டுதான் மனுதாரர் காலி செய்துள்ளார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இங்கே சொல்லப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்குக்கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் காவல்துறை நன்மதிப்பை இழக்க நேரிடும். அதிலும், காவல்துறை மீது மக்கள் மத்தியில் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன’ எனக் குறிப்பிட்டார்.

“காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களிலேயே கருப்பு பிலிம் பயன்படுத்தப்படுகிறது. காவல்துறையின் பெயரையும் வாகனங்களில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவலர்களைப் பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், தலைமையின்கீழ் செயல்படுகிறவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தீர்வு ஆகியவை குறித்து அரசு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.Source link

Leave a Reply

Your email address will not be published.