அதிமுகவில் என்ன நடக்கிறது? இபிஎஸ் vs ஓபிஎஸ் சர்ச்சையில் இன்று – பொதுக்குழுவை நடத்த தடை இல்லை – உயர் நீதிமன்றம்


பட மூலாதாரம், Getty Images
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் கூட்டாக நிர்வகிக்கப்படும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குரல் கொடுத்த நிலையில், பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
முன்னதாக, பொதுக்குழுவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த அஜெண்டாவையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் கட்சியின் விதிகளைத் திருத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி கை ஓங்குகிறதா?
எடப்பாடி பழனிசாமிக்கு அதிக எண்ணிக்கையிலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுவதாகவும் “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்” என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
“மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்”.
இதே கருத்தை அவர், டிவிட்டரிலும் பகிர்ந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து அதிமுகவில் உரசல் தீவிர நிலையை எட்டியிருப்பதைக் காட்டுகிறது. நாளை ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில் இந்த பரபரப்பு நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறி வருகின்றன.
வளர்மதி, மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது தலைமையில் செயல்பட தங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றனர்.
ஓபிஎஸ் வெளியிட்ட பதிவைப் பற்றி குறிப்பிட்ட வளர்மதி அதிமுகவில் அராஜகம் ஏதுமில்லை என்றும், யாரும் ஓரம் கட்டப்படவில்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஓபிஎஸ் நாளை நடக்கவுள்ள பொதுக்குழுவில் பங்கேற்பார் என்றும் அதிமுக ஒற்றுமைக்கு ஆதரவாக இருப்பார் என்றும் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார் அசோக்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டத் தடை விதிக்கக் கோரியும், கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்று கூறியும் அதிமுகவை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தப்புக்கு மேல் தப்பு செய்கிறார்கள்: ஜெயக்குமார்
பொதுக்குழுவுக்குத் தடை கோரி வழக்குத் தொடர்ந்ததன் மூலம் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்தவர்கள் தப்புக்கு மேல் தப்பு செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குவிந்தனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாளை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாகிவரும் சூழலில் இது நிகழ்ந்து வருகிறது.
‘பொதுக்குழுவில் எதுவும் நடக்கும்!’ – உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு
‘பொதுக்குழுவில் கலந்து கொள்வேன், ஆனால் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த அஜெண்டாக்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என என சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோரும், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டன. பொதுச் செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய நியமனங்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கே அதிகாரம் இருப்பதால் இவர்கள் இருவரும் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றைக் கூட்டவும் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 22) விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி.எஸ் சார்பாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பொதுக்குழு தொடர்பான அஜெண்டா எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, 23 வரைவு தீர்மானங்களின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாதிட்ட ஓ.பி.எஸ் தரப்பு, ’23 வரைவு தீர்மானங்களும் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் மூலமாக வந்தது. இதனைத் தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது. கட்சி விதிகளுக்கு மாறாகவும் செயல்பட மாட்டோம். பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் பங்கேற்பார்’ எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘ஒருங்கிணைப்பாளர்களும் இணை ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் இருவரையும்விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. கடந்த 2 ஆம் தேதி தேதியே பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுநாள் வரையிலும் பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றுக்கான அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை. விதிகளை திருத்தம் செய்வதற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அப்போது என்ன நடக்கும் என உத்தரவாதம் தர முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் காணி பழங்குடி இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: