கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம்: அணு உலைகளுடன் கூடிய ஆலைகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்குமா?

- கிறிஸ் பாரானியூக்
- தொழில்நுட்ப வணிக செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு கண்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சமூகங்கள் இருப்பதாக ஐநா கூறுகிறது.
கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் பெருமளவு தண்ணீர் இருக்கிறது. துருதிருஷ்டவசமாக அதில் நன்னீர் 2.5 சதவீதம்தான். குடிநீருக்கான தேவை 2030ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் கியூபிக் மீட்டர் அளவை தொட்டுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடலின் உவர்நீரை நன்னீராக்கும் ஆலைகள், தேவையான அளவுக்கு நீரை விநியோகிக்க உதவலாம்.
ஆனால், இம்முறை மூலம் குடிநீரை உற்பத்தி செய்வது மிகவும் செலவுகரமானதாக கருதப்படுகிறது.
உவர் நீரை குடிநீராக்கும் ஆலைகளுடன் கூடிய கப்பல்கள் இதற்கான தீர்வாக இருக்கலாம்.
அணு உலைகள் தீர்வாக அமையுமா?
அணு உலைகள் மூலம் இயக்கப்படும் இந்த கப்பல்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தீவுகள் அல்லது கடற்கரையோர பகுதிகளுக்குச் சென்று, சுத்தமான குடிநீர் மற்றும் மின்சாரம் இரண்டையும் கொண்டு வரலாம்.
“இதன்மூலம் இடைவிடாமல் சென்று தொட்டிகளில் நீரை நிரப்பலாம்,” என, இத்தகைய ஆலைக்கான வடிவமைப்பைக் கொண்டு வந்துள்ள ‘கோர் பவர்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிக்கல் போயி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம், பயன்பாட்டுக்குத் தகுந்தது அல்ல எனத் தோன்றலாம், ஆனால், அணு உலைகளால் இயக்கப்படும் இத்தகைய ஆலைகள் மூலம் அமெரிக்கக் கடற்படை கடந்த காலங்களில் பேரிடர்களின்போது சேவைகளை வழங்கியுள்ளது. மேலும், ரஷ்யாவும் ஏற்கெனவே இத்தகைய மிதக்கும் அணு உலைகளை வடிவமைத்துள்ளது.
உலகம் முழுவதிலும் உவர் நீரை குடிநீராக்கும் சுமார் 20,000 ஆலைகள் செயல்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை கடற்கரையோரங்களில் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் பெரும்பாலானவை சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பிரிட்டன், சீனா, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செயல்படுகின்றன.
ஆனால், இத்தகைய தொழில்நுட்பம், கடற்கரையில் அல்லாமல், கடலில் இருந்து செயல்படும்போது செலவு குறையும் என சில பொறியாளர்கள் கூறுகின்றனர், மேலும் இதன்மூலம் கடல்நீரை உறிஞ்சி எளிதாக கப்பலில் செலுத்தமுடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பட மூலாதாரம், CORE POWER
கடலில் மிதக்கும் அணு உலைகள் மூலம் இயக்கப்படும் இத்தகைய ஆலைகளை வடிவமைப்பது குறித்து பொறியாளர்கள் பல தசாப்தங்களாக கனவு காண்கின்றனர்.
இதற்காக, சிறிய சரக்குக் கப்பல்களை பயன்படுத்த கோர் பவர் நிறுவனம் விரும்புகிறது. ஆனால், உவர்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பத்துடன்கூடிய கண்டெய்னர்களை கப்பலில் அடுக்கி வைக்கின்றனர். இந்த கப்பலின் மையத்தில் அணு உலை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலை, தேவையான அதிகளவு மின்சாரத்தை வழங்குகிறது.
இத்தகைய அணு உலைகளுடன் கூடிய ஆலைகள், 5 மெகாவாட்டிலிருந்து 70 மெகாவாட் வரையிலான மின் உற்பத்தியின் பல்வேறு நிலைகளைக் கொண்டிருக்கலாம் என, போயி கூறுகிறார். ஐந்து மெகாவாட் மின்சாரத்தில் 35,000 கியூபிக் மீட்டர் அளவிலான நீரை வெளியேற்றலாம் அல்லது 14 ஒலிம்பிக் நீச்சல் குளங்கள் அளவிலான நன்னீரை தினந்தோறும் வெளியேற்றும்.
உவர்நீரிலிருந்து உப்பை வெளியேற்ற, கடல்நீரை பகுதியளவு ஊடுருவக்கூடிய சவ்வு வழியாக அழுத்தத்தின் மூலம் இந்த தொழில்நுட்பம் தள்ளுகிறது. இந்த சவ்வூடுபரவல் முறையில், திரவ மூலக்கூறுகளின் இயக்கத்தின்மூலம் நீரில் உள்ள கனிமங்கள் நீக்கப்பட்டு, உவர் நீரில் உள்ள உப்பு வெளியேறி நன்னீர் கிடைக்கிறது.
வெவ்வேறு வடிவங்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பட்டத்தின் திறன், இத்தனை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆனால், மிதக்கும் ஆலைகள் அரிதாகவே உள்ளன.
இத்தகைய மூன்று ஆலைகளில் ஒரு ஆலையை தற்போது சௌதி அரேபியா வாங்கியுள்ளது, இது இத்தகைய ஆலைகளிலேயே மிகப்பெரியது. எனில், இதுபோன்ற மிதக்கும் ஆலைகள் பயன்பாட்டுக்கு வருமா?
பட மூலாதாரம், Getty Images
வாட்டர் ஃபவுண்டெயின் என்கிற தொழில்நுட்பட்பத்தை வடிவமைத்துள்ள ஓய்சான் இன்ஜினியரிங் நிறுவனம் (Oisann Engineering) இதனை நம்புகிறது.
பெரிய கப்பல்கள் முதல் சிறிய மிதவைகள் வரை இந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஒரே தத்துவத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெய்ல் ஹாப்கின்ஸ் விளக்குகிறார்.
இதில் பெரிய வித்தியாசம் என்னவென்றால், இவை அனைத்தும் பல தசாப்தங்கள் பழைய தொழில்நுட்பமான கடலுக்கடியில் உவர்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது, அணு உலை மின்சாரத்தால் அல்ல.
“இந்த தொழில்நுட்பம் ஒருபோதும் வணிகமயமாக்கப்படவில்லை, ஏனெனில், நீரை மேற்பரப்புக்கு எடுத்துச் செல்ல இன்னும் கடலுக்கடியில் குழாய்கள் தேவைப்படுகின்றன,” என்கிறார் ஹாப்கின்ஸ். “வாட்டர் ஃபவுண்டெயின் தொழில்நுட்பத்தில் நாங்கள் குழாய்களைப் பயன்படுத்துவதில்லை” என்கிறார் அவர். இந்த தொழில்நுட்பம் மொத்தத்தில், அதிக ஆற்றலைச் செலுத்தாமல், நீரை வெளியேற்ற கடற்பரப்பில் உள்ள அதிக அழுத்தத்தைப் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
கப்பலில் இருந்து கரைக்கு செல்லும் பைப்லைன், நன்னீர் இறுதியாக செல்ல வேண்டிய இடத்தில், புவியீர்ப்பு விசை நீரின் ஓட்டத்திற்கு மேலும் உதவும். மேலும் இது அதிக ஆற்றலுக்கான தேவையை குறைக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வழக்கமான ஆலைகளை விட இந்த தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆலைகள் ஆற்றலின் அடிப்படையில் 30 சதவீதம் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என, ஹாப்கின்ஸ் கூறுகிறார். இந்த ஆலை வடிவமைப்பின் சிறிய மாதிரியை உருவாக்கும் பணியில் இந்நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் இந்த ஆலையை நிறுவ முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.
பட மூலாதாரம், WATER FOUNTAIN
கோர் பவர் நிறுவனத்தின் ஆலை வடிவமைப்பு உள்ளிட்ட இத்தகைய யோசனைகள் “நம்பகமானவை” என, பிரிமிங்காம் பல்கலைக்கழகத்தின் சஸ்டெயினபிள் எனர்ஜி டெக்னாலஜி லேபரேட்டரியின் தலைவர் ராய ஆல்-டாடா கூறுகிறார். எனினும், இத்தகைய மிதக்கும் ஆலைகள் நிறைகள், குறைகள் என இரண்டையும் கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார். உப்பு நீக்கப்பட்ட நீரை கடற்கரைக்குக் கொண்டு வருவதிலும் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ற பணியாளர்களை கண்டறிவதிலும் இன்னும் சவால்கள் உள்ளன.
காலநிலை மாற்ற விளைவுகளை இந்த உலகம் அனுபவிக்கும் வேளையில், 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பத்தை உணரும்போது, இறுதியில் மனிதர்களுக்கு நீர் ஆதாரங்கள் தேவை எனக்கூறும் அல்ப்-டாடா, “காலநிலை மாற்றம் நீர் ஆதாரத்தின் மீது பேரழிவு விளைவுகளைக் ஏற்படுத்தும்” எனக்கூறுகிறார்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் எமி சில்ட்ரஸ், சிறிய மிதக்கும் ஆலைகள் இத்தகைய தொழில்நுட்பத்தால் ஏற்படும் சூழலியல் தாக்கங்களை குறைக்க உதவும் என கூறுகிறார். உவர் நீரிலிருந்து நீக்கப்பட்ட அதிக உப்புத்தன்மை கொண்ட நீர், கடல் வாழ்வியலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் நன்னீரை விட இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த நீரை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
வாட்டர் பவுண்டெயின் தொழில்நுட்பம் மூலம் வெளியேறப்படும் நீர் அதிகளவு உவர்ப்பாக இருக்காது என ஹாப்கின்ஸ் கூறுகிறார்.