அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் டெல்லி விரைகிறார் – தேர்தல் ஆணையத்தை அணுக திட்டம்


அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் (இடமிருந்து இரண்டாவது)
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமது மகன் ரவீந்திரநாத், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி செல்ல கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை, தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பொதுக்குழுவே செல்லாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் இன்று பிற்பகலில் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “23 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 23 தீர்மானங்களை அவர்கள் ரத்து செய்துவிட்டார்கள். அவர்களுக்கு அதனை ரத்து செய்ய உரிமை இல்லை. அவைத் தலைவர் தேர்வு செல்லாது. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், இதுதான் அதிமுகவில் இருந்த நடைமுறை. அங்கு கூடியிருந்தவர்கள் உறுப்பினர்கள் அல்ல. பணத்தை கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அது உண்மையானது அல்ல,” என்றார்.
இதன் மூலம், பொதுக்குழு உறுப்பினர்களே ரத்தாகிவிட்டார்கள். அதாவது பதவி வெறி சட்டத்தை மறந்து, நீதி அரசர்களின் உத்தரவை மறந்து, நடந்து கொண்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்து கேள்வி எழுந்தபோது,”வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்காது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்.
பொதுக்குழு கூட்டம் என்பது புரட்சித் தலைவர், புரட்சி தலைவி இருந்த காலத்தில், அவ்வளவு அழகாக இருக்கும். அது மிகவும் கட்டுப்பாட்டாக இருக்கும். இன்று கட்டுப்பாடு இல்லாமல் காட்டுமிரண்டிதானமாக நடந்து இருக்கிறது.
இப்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டமே செல்லாது,” என்றார்.
இத்தகைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு, “பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஒருங்கிணைப்பாளர் தயாராக இருக்கிறார். அதிமுக கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்; ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து,” என்றார்.
இந்த பொதுக்குழு கூட்டம் ஜனநாயக அடிப்படையில் நடக்கவில்லை என்றும், அவர் இது அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் எனவும் வைத்திலிங்கம் கூறினார்.
முன்னதாக, இந்தப் பொதுக்குழு சட்டவிரோதமாக நடப்பதாக கூறி ஓ.பி.எஸ்.
வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். மேடையில் இருந்து இறங்கும்போது ஓ.பி.எஸ். மீது பாட்டில் வீசப்பட்டது. வழி நெடுகிலும் ‘ஓபிஎஸ் ஒழிக’ என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
அதன் பிறகு, எடப்பாடிக்கும், ஒற்றைத் தலைமைக்கும் ஆதரவாக எஸ்.பி. வேலுமணி பேசினார். பிறகு கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் வெளியேறினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: