அதிமுக பொதுக்குழு: தமிழ்மகன் உசேன் யார்? அவைத் தலைவர் நியமனம் எடப்பாடிக்கு துருப்பு சீட்டா?

- ஆ.விஜய் ஆனந்த்
- பிபிசி தமிழுக்காக

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து கடந்த 14 ஆம் தேதி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, ‘ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற வாதம் ஓ.பி.எஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
ஓ.பி.எஸ்ஸின் தொடர் போராட்டம்
ஆனால், ‘ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியே வர வேண்டும்’ எனக் கூறி பல்வேறு மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓ.பி.எஸ் பக்கம் இருந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன், வேளச்சேரி அசோக் உள்பட ஏராளமான நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, ‘பொதுக்குழு கூட்டத்துக்காக ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எதற்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையோடு, நீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் அணுகினார்.
இதையடுத்து, பன்னீர்செல்வத்துக்காக அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘பொதுக்குழுவை நடத்துவதற்கு தடையில்லை எனவும் அதேநேரம், விதிகளைத் திருத்துவது என்பது கட்சியின் உள்விவகாரம் என்பதால் அதில் தலையிட விரும்பவில்லை’ எனவும் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து நேற்று இரவே ஓ.பி.எஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில், ‘பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை. 23 தீர்மானங்களைத் தவிர புதிதாக வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன்
தொடர்ந்து, வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, ‘அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர். தொண்டர்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை என்பது ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பதுதான். அந்த ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவை தலைமை கூட்டும்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்’ என்றார். இதே கருத்தை வலியுறுத்தி சி.வி.சண்முகமும் பேசினார்.
இதையடுத்து, அ.தி.மு.கவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கைத்தட்ட வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டார். ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு மத்தியில் தமிழ்மகன் உசேன் பொறுப்பேற்றுக் கொண்டது, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டபோது, அவருக்குப் பக்கபலமாக அப்போதைய அவைத் தலைவர் மதுசூதனன் இருந்தார். தேர்தல் ஆணைய வழக்குகளில் மதுசூதனன் முன்னிறுத்தப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். தற்போது அவரை நிரந்தர அவைத் தலைவராக நியமித்துள்ளனர். அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ள சூழலில், ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்ற கேள்வி அ.தி.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது.
யார் இந்த தமிழ்மகன் உசேன்?
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்று கொண்டவர். அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் இவர். கடந்த 1972 ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது, நாகர்கோவிலில் இருந்து மேலூருக்கு தான் ஓட்டி வந்த அரசுப் பேருந்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்தார். தனது அரசுப் பணியையும் ராஜினாமா செய்துவிட்டார். இதன்பின்னர், ‘எம்.ஜி.ஆர் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டும்’ என வலியுறுத்தியவர்களில் ஒருவராக இருந்தார். அவ்வாறு எம்.ஜி.ஆர் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டுமென சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் நடைபெற்ற கூட்டத்தில் கையொப்பமிட்ட 11 பேரில் ஒருவராக தமிழ்மகன் உசேன் இருந்தார். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரத்தைத் தாண்டி அவரால் செயல்பட முடியவில்லை. அ.தி.மு.கவின் தொடக்ககாலத் தொண்டர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் தமிழ்மகன் உசேன், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வக்பு வாரியத் தலைவராகவும் பணியாற்றினார்.
தனக்கு அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து பொதுக்குழுவில் பேசிய தமிழ்மகன் உசேன், ’68 ஆண்டுகாலம் பொதுச் சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்த இயக்கத்தின் எளிய தொண்டனாக எந்தவித மனச் சங்கடங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததைப் புரிந்து கொண்டு என்னை கவுரவிக்கும் வகையில் அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் ஏழைத் தொண்டனும் இந்தச் சபையில் அவைத் தலைவராகலாம் என்ற வரலாற்றை உருவாக்கித் தந்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அவைத் தலைவர் நியமனம் செல்லுமா?
இந்தநிலையில், ”23 வரைவுத் தீர்மானங்களில் தமிழ்மகன் உசேனின் தேர்வும் இருக்கிறது. ஆனால், தீர்மானங்களை முற்றாக நிராகரிப்பதாகக் கூறிவிட்டதால் இந்த நியமனம் செல்லுமா?” என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
” பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், மாவட்ட அளவிலான தேர்தல், வரவு செலவு கணக்கு, அவைத் தலைவர் தேர்வு என அனைத்துமே அந்த 23 தீர்மானங்களுக்குள் அடங்கும். குறிப்பாக, வரவு செலவை கணக்கை பொதுக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. அதிலும், பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம்தான் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நேற்றே வரவு செலவு கணக்குகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டனர். இரங்கல் தீர்மானம், தி.மு.க அரசைக் கண்டிப்பது, மேக்கேதாட்டு விவகாரம் என பல தீர்மானங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இவற்றையெல்லாம் நிராகரிப்பதாக சற்று உற்சாகமாகவே சி.வி.சண்முகம் கூறிவிட்டதாகப் பார்க்க முடிகிறது. அதேநேரம், பொதுக்குழுவுக்கு என சில வரையறைகள் உள்ளன” என்கிறார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், ”அ.தி.மு.க விதிகளின்படி இல்லாவிட்டாலும் சட்டரீதியாக இதனைப் பார்க்க வேண்டும். சட்டம் என்பது மூன்று வகைப்படும். முதலில், சட்டத்தின் முன் அனைவரும் சமம், இரண்டாவது, சட்டத்தின் பார்வையில், மூன்றாவதாக சட்டத்தின்கீழ் எனப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் இந்தப் பொதுக்குழு செல்லத்தக்கதா என்ற கேள்வி எழுகிறது” என்கிறார்.
திருத்தப்படாத விதிகள்
”தமிழ்மகன் உசேனின் நியமனம் எந்தளவுக்கு முக்கியமானது?” என்றோம். ”அவைத் தலைவர் பதவி என்பது கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது மட்டும்தான். அண்ணா தி.மு.கவின் உள்கட்சி விதி என்பது தேர்தல் ஆணையத்தின் இணைய தளப் பக்கங்களில் இருப்பதுதான். அ.தி.மு.கவின் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இருக்கிறது. அந்த விதியை பொதுக்குழுவில் திருத்தவில்லை.
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் உள்ளது. அப்படித்தான் இந்தப் பொதுக்குழுவையும் இருவரும் கூட்டினார்கள். அது விதியில் மிகத் தெளிவாகவும் உள்ளது. அப்படிப் பார்த்தால் அவைத் தலைவர் கூட்டுகின்ற பொதுக்குழு மட்டும் எப்படி செல்லுபடியாகும்?” என்கிறார்.
” தர்மயுத்தம் நிகழ்வுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு போட்டபோது, மதுசூதனனும் செம்மலையும் அவருடன் இருந்தனர். அப்போது அவைத் தலைவராக மதுசூதனனும் அமைப்புச் செயலாளராக செம்மலையும் இருந்தனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு முக்கியத்துவம் பெற்றது. தற்போது ஓ.பி.எஸ் மட்டும்தான் மனு கொடுக்க முடியும். செம்மலை, எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார். மதுசூதனன் உயிருடன் இல்லை. அவைத் தலைவராக உள்ள உசேனும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்” எனக் குறிப்பிடுகிறார் ஷ்யாம்,
2 தேர்வுகளில் வென்ற எடப்பாடி
” 1971 ஆம் ஆண்டு சாதிக் அலி வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்துக் கொடுத்த வழிகாட்டும் நெறிமுறைகளின்படி கட்சிகளில் பிளவு ஏற்பட்டால் மூன்று வகையான முறையில் பெரும்பான்மை கவனிக்கப்படும். அதைத்தான் எப்போதும் தேர்தல் ஆணையம் உதாரணமாகக் காட்டுகிறது. முதல் பரிசோதனை என்பது கட்சியின் எம்.எல்.ஏ, எம்.பிக்களில் எவ்வளவு பேர், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது, அடுத்ததாக, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில் யார், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது, மூன்றாவது கட்சியின் விதிகளின்படி யார் பக்கம் அதிக பெரும்பான்மை இருக்கிறது என்பது. கட்சியின் விதிகளின்படி உள்ள பெரும்பான்மைக்குள் தேர்தல் ஆணையம் செல்வதில்லை. காரணம் அது சிவில் விவகாரம் என்பதுதான். முதல் இரண்டு பெரும்பான்மைகளில் எடப்பாடி பழனிசாமி தேறிவிட்டார். இதில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை” என்கிறார்.
”இதுபோன்ற நேரங்களில் அவைத் தலைவர் யார் பக்கம் என்பது முக்கியவத்தும் வாய்ந்ததா?” என்றோம். ” ஆமாம். மதுசூதனனை சசிகலா தரப்பு கோட்டைவிட்டதால் அவர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றார். தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் அளித்த மனுவில் முதல் நபராக மதுசூதனன் இருந்தார். சபாநாயகருக்கு பெரிய அதிகாரம் இல்லையென்றாலும் சட்டமன்றத்தில் கட்சி பிளவுபடும்போது அவர் எடுக்கின்ற முடிவு முக்கியமானதாக இருக்கும். அதைப் போலத்தான் இதுவும்” என்கிறார்.
அடுத்தகட்டம் என்ன?
”இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?” என்றோம். ”அ.தி.மு.கவில் மேலும் மேலும் குழப்பம்தான் நீடிக்கும். தற்போது வரையில் எந்தத் தெளிவும் பிறக்கவில்லை. கட்சி இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது. அடுத்தகட்டமாக ஒருவரை ஒருவர் கட்சியைவிட்டு நீக்கும் காட்சிகள் நடக்கலாம். அ.தி.மு.கவுக்குள் ஓ.பி.எஸ்ஸுக்கு இனி முக்கியத்துவம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இரட்டை இலை முடங்கினாலும் முடங்காவிட்டாலும் அவருக்குப் பிரச்னையில்லை. இதன்பிறகு போட்டி அ.தி.மு.கவை தொடங்கப் போகிறார்களா எனப் பார்க்க வேண்டும்” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசுகையில், ” 1997 ஆம் ஆண்டு திருநாவுக்கரசரை ஜெயலலிதா நீக்கினார். அவர் போட்டி அ.தி.மு.கவை தொடங்கி புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றார். திருநாவுக்கரசர், அரங்கநாயகம், முத்துச்சாமி, கண்ணப்பன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்றனர். ஜெயலலிதாவிடம் இருந்து கட்சியை கைப்பற்றுவோம் என்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இதேபோன்ற நிலைதான் தற்போது நிலவுகிறது. எடப்பாடிதான் கட்சியைப் பற்றியும் இரட்டை இலையைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். ஓ.பி.எஸ் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” என்கிறார்.
மேலும், ”இன்றைக்கு நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் மிகுந்த பதற்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்தார். மாலை போட வந்தவர்களையும் அவர் சாடினார். பழைய தேர்தல் ஆணைய வழக்குகளில் மனோஜ் பாண்டியன் சூத்திரதாரியாக இருந்தார். அவர் ஓ.பி.எஸ் பக்கம் இருக்கிறார். ஓ.பி.எஸ் எந்த எல்லைக்கும் செல்வார். இனி வரும் நாள்களில் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் அதர்மமே வெல்லும்” என்றார் ஷ்யாம்.
தொடரும் சட்டப் போராட்டம்
இதையடுத்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, ” அவைத் தலைவர் பதவி என்பது முக்கியமானது என்பதால் தமிழ்மகன் உசேனை தங்கள் கைகளில் வைத்துக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி தரப்பு விரும்புகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரத்துக்கு முக்கியத்துவத்தும் கொடுத்துவிட்டு, தமிழ்மகன் உசேனை சிரமப்படுத்தினர். தற்போதைய சூழலில் உசேன் என்ன முடிவெடுப்பார் எனவும் தெரியவில்லை. தங்களுக்குச் சாதகமாக உசேனை துருப்புச் சீட்டாக பயன்படுத்தவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பார்க்கிறது. அ.தி.மு.கவில் பெரும்பான்மை ஆதரவு என்பது எடப்பாடிக்கு உள்ளது. இனி வரும் நாள்களில் சட்டப் போராட்டம் தொடர்வதற்கே வாய்ப்புள்ளது” என்கிறார்.
சூரிய ஒளியால் படம் வரையும் மயிலாடுதுறை இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: