ஆபரேஷன் தாமரை: மகாராஷ்டிராவில் சிவசேனை பிளவின் பின்னணியில் பாஜக இருந்ததற்கான 5 அறிகுறிகள்

- ஆஷிஷ் திக்ஷித்
- ஆசிரியர், பிபிசி மராத்தி

பட மூலாதாரம், Getty Images
தேவேந்திர ஃபட்னவிஸ்
மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வெளிப்படையாகப் பேசுவதற்கு பெயர் பெற்றவர். மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியான மஹா விகாஸ் அகாடியில் எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்தபோதும், ‘அரசு விரைவில் கவிழும்’ என்று ஒவ்வொரு வாரமும் அவர் கணித்து வந்தார். ஆனால், தற்போது அரசு ஏறக்குறைய கவிழ்ந்து விடும் சூழலில் உள்ள நிலையில், சந்திரகாந்த் பாட்டீல் எதுவுமே பேசவில்லை.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “ஏக்நாத் ஷிண்டேயின் எதிர்ப்பு சிவசேனையின் உள்விவகாரம்” என்றார். ஆனால் இது உண்மையிலேயே சிவசேனையின் உள் விவகாரமா? அல்லது இந்தக் கிளர்ச்சிக்கான ரிமோட் கண்ட்ரோல் பாஜகவிடம் உள்ளதா?
இது பாஜக தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவிஸின் ‘ஆபரேஷன் தாமரை’ என்றால், பாஜக ஏன் அதை வெளிப்படையாகக் கூறவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுவது நியாயமானதே.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனை கட்சிக்குள் விரிசல் அதிகரித்து வருகிறது. இதன் போது அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கோபமடைந்துள்ளனர். உத்தவ் தாக்கரேயை சந்திப்பதுஅவரது கட்சி எம்எல்ஏக்களுக்குக் கூட கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கள் பகுதியில் சிறு சிறு பணிகள்கூட நடைபெறாததால் சிவசேனையின் சில கட்சி நிர்வாகிகள் கோபமடைந்துள்ளனர். மிக முக்கியமாக, காங்கிரஸுடன் ஒரு ‘மதச்சார்பற்ற’ அரசில் இருப்பது, கடுமையான இந்துத்துவ சிவசேனை தொண்டர்களிடையே அதிருப்தியையும் கசப்பையும் உருவாக்கியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சிவசேனையில் அதிகரித்து வரும் இந்த அதிருப்தியை எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் அது இன்னும் ஆச்சரியமாக இருந்திருக்கும். கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றார். ஆனால் அந்த அரசு சுமார் அறுபது மணி நேரங்களிலேயே கவிழ்ந்தது.
இதனால் ஃபட்னவிஸ் பெரிதும் பாதிக்கப்பட்டார். அதிகார ஆசையால் அவர் இதைச் செய்தார் என்ற பிம்பம் அவருக்கு ஏற்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அவசரத்தில் தான் இருப்பதான ஒரு பிம்பத்தை தற்போது உருவாக்க அவர் விரும்பவில்லை என்று தோன்றுகிறது.
ஒருவேளை இதனால்தான் இப்போது இன்னொரு ‘ஆபரேஷன் தாமரை’ நடத்த பாஜக திட்டமிட்டிருந்தால், இந்த முறை அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை நிபுணரின் கையில் கத்தி, கத்தரிக்கோல் எதுவும் தென்படாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
உள்கட்சி எதிர்ப்பால் மகாராஷ்டிர விகாஸ் அகாடியின் இந்தக் கூட்டணி ஆட்சி கவிழும் என ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக தேவேந்திர ஃபட்னவிஸ் கூறி வருகிறார். தற்போது ஆட்சி தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், இது சிவசேனையின் உள்விவகாரம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் கூர்ந்து கவனித்தால், ஏக்நாத் ஷிண்டேயின் கைகளில் கிளர்ச்சிக் கொடியை பாஜகதான் கொடுத்துள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.
இந்தக்கிளர்ச்சி,’ஆபரேஷன் தாமரை’ என்பதற்கான ஐந்து தெளிவான அறிகுறிகள்…
பட மூலாதாரம், Getty Images
1.விமான நிலையத்தில் மோஹித் கம்போஜ் இருப்பது
மோஹித் கம்போஜ் மும்பையில் பாரதிய ஜனதா கட்சியின் நன்கு அறியப்பட்ட முகம். சூரத் விமான நிலையத்தில் சிவசேனை எம்.எல்.ஏ.க்களை காம்போஜ் விமானத்தில் ஏற்றுவதை பார்க்கமுடிந்தது. இது சிவசேனையின் உள்விவகாரம் என்றால், சிவசேனையின் கிளர்ச்சி எம்எல்ஏக்களுக்கு உதவ கம்போஜ் ஏன், எதற்காக அங்கு வந்தார்? ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் விமானத்தை முன்பதிவு செய்தது யார் என்ற கேள்வியும் உள்ளது.
மோஹித் கம்போஜ் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். அவர் ஒரு பணக்கார நகை வியாபாரி. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையின் டிண்டோஷி தொகுதியில் அவருக்கு பாஜக டிக்கெட் கொடுத்தது. அப்போது அவருக்கு இருநூற்றி ஐம்பது கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. பல பழைய தலைவர்களை ஒதுக்கிவிட்டு கம்போஜுக்கு எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி பல விவாதங்கள் நடந்தன.
தேர்தலில் தோற்றாலும் கட்சியில் அவருக்கு அந்தஸ்து குறையவில்லை. மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவும் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் தான் எந்த நிதி மோசடியும் செய்யவில்லை என்று கம்போஜ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
2. ஷிண்டேவுடன் சஞ்சய் குட்டே
டாக்டர் சஞ்சய் குட்டே பாஜகவின் இளைஞர் அணித்தலைவர். தேவேந்திர ஃபட்னாவிஸின் நம்பிக்கைக்குரியவர் என்பது அவரது சமீபத்திய அடையாளம். சிவசேனையின் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் சூரத் சென்றதும், முதலில் சஞ்சய் குட்டே அங்கு சென்றடைந்தார். உத்தவ் தாக்கரேவின் பிரதிநிதி மிலிந்த் நர்வேகர் சூரத்தில் உள்ள ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பே, ஏக்நாத் ஷிண்டேவை சஞ்சய் குட்டே சந்தித்தார். எம்.எல்.ஏ.க்களை சந்தித்தது மட்டுமின்றி அவர் அங்கேயே உடனிருந்தார்.
மேலும் சிவசேனையின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் குவஹாத்தியை அடைந்தபோது, குட்டேவும் அங்கு இருந்தார். சட்டப்பேரவையில் தேவேந்திர ஃபட்னவிஸின் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் டாக்டர் சஞ்சய் குட்டே, அரசியல் வட்டாரங்களில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் நடந்த மாநிலங்களவை மற்றும் சட்டமேலவை தேர்தல்களின் போதும், டாக்டர் சஞ்சய் குட்டே வாக்குச்சாவடி முகவராக பணியாற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
3. பாஜக ஆளும் மாநிலங்களில் எம்எல்ஏக்கள்
சிவசேனை கட்சியின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தலைவர் மீது மட்டுமே கோபமாக இருந்தால், மகாராஷ்டிராவில் எங்கு வேண்டுமானாலும் இருந்துகொண்டு போனை அணைத்துவிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம். மகாராஷ்டிராவிற்குள் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் உள்ளன. முன்னதாக, அஜித் பவாரோ அல்லது வேறு எந்த தலைவரோ கோபப்பட்டால், அவர்கள் மாநிலத்தில் எங்காவது சென்று தனது தொலைபேசிகளை அணைத்துவிடுவார்கள்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே குழுவினர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் லோனாவாலா அல்லது முல்ஷிக்கு செல்லவில்லை. மகாராஷ்டிராவின் எல்லையைக் கடந்து குஜராத் சென்றார்கள். குஜராத், பாஜக ஆளும் மாநிலம் மட்டுமல்ல, மோதி-ஷாவின் வலுக்கோட்டையும் ஆகும். குஜராத் காவல்துறையின் பாதுகாப்பில் அவர்கள் அங்கு தங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
அதன்பிறகு எல்லா எம்எல்ஏக்களும் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அசாமுக்கு சென்றனர். அங்கும் அவர்களுக்கு உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இது சிவசேனையின் உள் அதிருப்தி என்றால், இந்த மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் ஏன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள குவஹாத்திக்கு செல்ல வேண்டும்? பாஜகவின் உதவி இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை.
பட மூலாதாரம், Getty Images
4. ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கை
உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டே விடுத்த கோரிக்கை அவரது சொந்த அதிருப்தி தொடர்பானது அல்ல. அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார். ஷிண்டே உத்தவ் தாக்கரே மீது உண்மையிலேயே கோபமாக இருந்திருந்தால், பாஜகவுடன் செல்வது பற்றி பேசாமல், தனது புகாரைமட்டும் அவர் முன் வைத்திருப்பார்.
பாஜகவுடனான உறவை முறித்து, மஹாவிகாஸ் அகாடி அமைப்பதில் உத்தவ் தாக்கரே முக்கியப் பங்காற்றினார். மேலும் அவரே முதலமைச்சரானார். கடந்த இரண்டரை ஆண்டுகளில், உத்தவ் தாக்கரேவும், பாஜகவும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்குப் பிறகு உத்தவ் தாக்கரே மீண்டும் பாஜகவுடன் செல்ல முடியாது என்பது ஏக்நாத் ஷிண்டேவுக்குத் தெரியும்.
ஆனாலும் இப்படி ஒரு கோரிக்கையை அவர் ஏன் விடுக்கிறார்? அவரது கருத்தை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டிருந்தால், அது பாஜக மற்றும் ஃபட்னவிஸுக்கு நேரடியாக பலன் அளித்திருக்கும். உத்தவ் தாக்கரேயின் முதல்வர் பதவி பறிபோயிருக்கும். அந்தப்பொறுப்பு ஃபட்னாவிஸின் தோள்களுக்கு வந்திருக்கும்.
ஷிண்டே சிவசேனையை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றால், வேறு கட்சியின் தலைவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற விசித்திரமான கோரிக்கையை அவர் முன்வைத்திருக்க மாட்டார்.
பட மூலாதாரம், Eknathshinde
ஏக்நாத் ஷிண்டே
5. ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சுதொனி
இந்த நெருக்கடியின் போது ஏக்நாத் ஷிண்டேவின் மொழியைக் கூர்ந்து கவனித்தால், அவர் பாஜகவின் மொழியில் பேசுகிறார் என்பதைக் காட்டுகிறது. “அதிகாரத்துக்காக பாலாசாஹேப்பின் இந்துத்துவ கொள்கையை கைவிடுவது சரியல்ல.”என்று அவர் சொன்னார். ஃபட்னவிஸ், சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பல பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இதே வாக்கியத்தை இதற்கு முன்பு பலமுறை பேசியிருக்கிறார்கள்.
பாஜக சிவசேனையுடன் உறவை முறித்துக் கொண்டது. ஆனால் பாலாசாஹேபின் வாரிசு என்று தன்னை கூறிக்கொண்டது. காங்கிரஸ்-என்சிபியுடன் சிவசேனை சென்றதிலிருந்து, அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே பாலாசாஹேப்பின் இந்துத்துவாவை சமரசம் செய்து கொண்டார் என்று ஃபட்னவிஸ் பலமுறை கூறி வந்தார்.
இதைத்தான் இப்போது ஏக்நாத் ஷிண்டே கூறுகிறார். உத்தவ் தாக்கரேவின் பெயரை ஷிண்டே நேரடியாக சொல்லவில்லை. ஆனால் அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே ‘பாலாசாஹேபின் இந்துத்துவாவை’ கைவிட்டார் என்று மறைமுகமாக கூறுகிறார்.
எனவே, ஷிண்டே குழுவினருடன் பாஜக எவ்வளவு இடைவெளியைக் கடைப்பிடித்தாலும், சிவசேனையின் தவறான நடவடிக்கைகளால் அது சிக்கலில் உள்ளது என்று சொன்னாலும், சிவசேனையின் வீட்டில் எரியும் நெருப்பிற்கு எண்ணெய் வார்க்கும் வேலையை பாஜக செய்திருப்பது உண்மைதான்.
தற்போது சுமார் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் ஷிண்டே குழுவில் இணைந்துள்ளதாக தெரிகிறது. பாஜகவும் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் ஷிண்டேயும் ஃபட்னவிஸும் ஒருவரையொருவர் பகிரங்கமாக ஆரத்தழுவிக்கொண்டால், அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: