கண்ணதாசன் பிறந்தநாள்: காலத்தைக் கடந்து ஒலிக்கும் கவிஞரின் பாடல்கள்


கவிஞர் கண்ணதாசன்
கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24. இது அவருடைய 95ஆம் பிறந்தநாள். இன்றைய சமூக சூழலுக்கும் அவருடைய பாடல்கள் எப்படி பொருந்துகின்றன என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பிபிசி தமிழுக்கு சுவாரஸ்யமாக பதிலளிக்கிறார் ‘இசைக்கவி’ ரமணன். அவரது பேட்டியிலிருந்தி சில பகுதிகள்…
கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன (என்று சொல்கிறார்கள்). அவற்றில் இன்றைய சமூகச் சூழலுக்கு மிகவும் பொருந்தும் சிலவற்றைச் சொல்ல முடியுமா?
பதில்: ‘கண்ணதாசன் எப்பொழுதோ இருந்தார், போய்விட்டார், ஆனல் இன்றைய சூழ்நிலைக்கு அவரது பாடல்கள் பொருந்துமா’ என்றொரு கேள்வி வருகிறது. இளைய தலைமுறையினர் கேட்கிறார்கள்.
இரண்டு வரிகள் சொல்கிறேன். பொருந்துகிறதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள்.
‘தம்பி ஒருவன் வெளியில் நின்றுகாசை எண்ணுகிறான்நம்பி ஒருவன் சிறையில் வந்துகம்பி எண்ணுகிறான்நாளை எங்கே யாரிருப்பார்அதுவும் தெரியல்லே – அடநல்லவனுக்கும் கெட்டவனுக்கும்பேதம் புரியல்லேஅட என்னத்த சொல்வேன்டா – தம்பிஎன்னத்த சொல்வேன்டா’ இன்றைக்கும் நம் அனைவருக்கும் ஆதாரமாக இருப்பவன் விவசாயி தானே.’ஆட்டம் போடும் மனிதருக்கும்ஆரவாரம் செய்பவர்க்கும்கோட்டை கட்டி வாழ்பவர்க்கும்கண்ணம்மாஒரு மூட்டையில்தான் உயிரிருக்குசின்னம்மாநெல்லு மூட்டையில்தான் உயிரிருக்குசின்னம்மா’ ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்று வள்ளுவர் எழுதி வைத்தார். ‘நெல்லு மூட்டையில்தான் உயிரிருக்கு’ என்று கண்ணதாசன் சொல்லி வைத்தார். அது இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் பொருந்தும்.
இவ்வளவு காலம் கடந்தும் பொருத்தமாக இருக்கக்கூடிய பாடல்களை அவரால் எப்படி எழுத முடிந்தது?
பதில்: கண்ணதாசன் தனிப்பட்ட கவிதையில் சொல்வார்:
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்கருப்படு பொருளை உருப்பட வைப்பவன்’சென்ற யுகத்தின் சேதியிலே காதுவைத்து, நின்ற யுகத்தின் நிலையறிந்து வாழ்பவன் கவிஞன். அதனால்தான் காலம் கடந்து அவனால் வாழ முடிகிறது.காலம் தாண்டி பார்க்கின்ற தரிசனம் கவிஞனுக்கு மட்டுமே வாய்க்கின்றது. கவிஞன் என்ற சொல்லுக்கு ‘seer’, ‘பார்ப்பவன்’, ‘முனிவன்’ என்ற பொருளுண்டு.
முக்காலத்தையும் உணர்ந்தவன் முனிவன். எக்காலத்திலும் தன்னைச் செலுத்திக்கொண்டு அந்த காலத்தில் என்ன நிகழும் என்று பார்ப்பவன், என்ன நிகழவேண்டும் என்று விரும்புபவன், எப்படி அதை நிகழ்த்த வேண்டும் என்றும் சொல்பவன். இவை மூன்றையும் கண்ணதாசன் அழகாக சொல்லியிருக்கிறார்.
இன்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெறும் top 3 கண்ணதாசன் பாடல்கள் எவை? அதில் ஒன்றை பாடிக் காட்டுங்களேன்…
பதில்: தலைமுறைகளைத் தாண்டி, தலைமுறை இடைவெளியைத் தாண்டி இன்றும் நம் நெஞ்சிலே குடியிருக்கக் கூடிய கண்ணதாசன் பாடல்கள் என்று நிறைய பாடல்களைச் சொல்லலாம்.
அவற்றில் ஒரேயொரு பாட்டை மட்டும் குறிப்பிடுவதென்றால் மிகவும் கடினம். இருந்தாலும் ஒரு பாடலைச் சொல்லலாம்.
‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்வாசல் தோறும் வேதனை இருக்கும்வந்த துன்பம் எதுவென்றாலும்வாடி நின்றால் ஓடுவதில்லைஎதையும் தாங்கும் இதயம் இருந்தால்இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்’
நம்பிக்கையை தருபவன் கவிஞன்.
கண்ணதாசன் இன்று இருந்திருந்தால், மாறியிருக்கும் இன்றைய தமிழ் சினிமாவில் ஜெயித்திருப்பாரா? அவரால் இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்க முடியுமா?
பதில்: என்ன இப்போது இருக்கக் கூடிய தேவை? எப்போதும் இருக்கக் கூடிய தேவை தான் இன்றைக்கும் இருக்கிறது.
நேசம் இருக்கின்ற வரைக்கும் கண்ணதாசனின் பாடல்கள் கட்டாயம் இருந்தே தீரும். எந்த காலகட்டத்திலும் அவர் ஜெயிக்கக் கூடியவர் ஏனென்றால் அவர் காலம் கடந்த கவிஞர்.
கண்ணதாசன் பிறந்த நாள்: இன்று இருந்திருந்தால் ஜெயித்திருப்பாரா? – ‘இசைக்கவி’ ரமணன் நேர்காணல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: