சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணை

- நடராஜன் சுந்தர்
- பிபிசி தமிழுக்காக

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடை மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாட பக்தர்களை அனுமதிக்கவேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனக சபை என்று குறிப்பிடப்படும், சிற்றம்பல மேடை மீது ஏறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், மேடை மீது வழிபட வரும் பக்தர்கள் தமிழில் திருமுறைகள் பாட தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார் வந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிற்றம்பல மேடை மீது பக்தர்கள் ஏறுவதற்கு கடந்து இரண்டு ஆண்டுகளாக தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
“சிற்றம்பல மேடை மீது நிற்கும் பக்தர்களால் கீழே தரிசனத்துக்கு நிற்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால், அடிக்கடி பிரச்னை வந்து கொண்டிருந்தது. மேலும் பணம் வாங்கிக் கொண்டு சிற்றம்பல மேடை மீது சிலரை மட்டும் அனுமதிப்பதாகவும், முக்கிய நபர்களை அனுமதிப்பதாகவும் தவறான சர்ச்சை எழுந்தது. இதனால் கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி சிற்றம்பல மேடை மீது யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது,” என சிதம்பரம் கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் கோயில்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பரவலாக கோயில்களுக்கு செல்லாமல் இருந்தனர். மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோயில் வழக்கம் போல செயல்படத் தொடங்கியபோது நடராஜர் கோயில் சிற்றம்பல மேடை மீது ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் தனிநபர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து சிதம்பரம் கோயிலில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களின்படி பக்தர்கள் கனகசபை மீதேறி வழிபட அனுமதிக்கவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிற்றம்பலம் மீதேறி வழிபட விரும்பினர். ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படாததால், சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடும் வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் இந்து அறநிலைத்துறை ஆணையர் கோயில் தீட்சிதர்களின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், “நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் தேவாரம் திருவாசகம் திருமுறைகளை ஓதி வழிபட தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கனவே அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு கால பூஜை முடிந்த பின்பும் 30 நிமிட நேரத்திற்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஓதி வழிபட கோயில் நிர்வாகத்தை அணுகும் பக்தர்களை அரசாணையின்படி அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும் திருமுறைகளை ஓதி வழிபட வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
“நீண்ட சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி”
தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஓதிட நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி என்று சிற்றம்பலம் மீது நின்று பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கக்கோரி வழக்கு தொடுத்த சிதம்பரத்தை சேர்ந்த எம்.என் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் திருமுறைகள் பாடிட அனுமதி மறுக்கப்பட்டு வந்த சூழலில், 2004ஆம் ஆண்டு சிற்றம்பல மேடை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி வழங்கக் கோரி ஆறுமுகசாமி அளித்த மனுவை மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நிராகரித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஆணையர் முன்பு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பரிவு 21ன் கீழ் ஆறுமுகசாமி 2006ல் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஆணையர் 2007 ஏப்ரல் 30ஆம் தேதியன்று சீராய்வு மனுவை ஏற்று முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.
உத்தரவின் முக்கிய அம்சங்கள்
1. கால பூஜையின் போது தீட்சிதர்கள் தமிழ்த் திருமுறைகளை அனைவரும் கேட்கும்படி ஓத வேண்டும். அதே சமயம் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள், திருச்சிற்றம்பலம் மேடை மீது நின்று தமிழ்த் திருமுறைகளை ஓதலாம்.
2. கால பூஜையின்போது தீட்சிதர்கள், ஓதுவார்கள் தவிர்த்து மற்ற பக்தர்கள் யாரும் தமிழ்த் திருமுறைகளைப் பாடக்கூடாது. ஏனெனில் கால பூஜையின் போது திருச்சிற்றம்பல மேடை மீது செல்வது வழக்கமல்ல.
3.கால பூஜை முடிந்த பின்பு திருச்சிற்றம்பல மேடை மீது சென்று வழிபடும் போது, விரும்பினால் தமிழ்த் திருமுறைகளை மற்ற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாட உரிமையுள்ளது. இதற்கு கோயில் நிர்வாகம் இடையூறாக இருக்கக்கூடாது.
மேற்கண்ட உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இரு தீட்சிதர்கள் மற்றும் ஆறுமுகசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2008ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் சென்று தமிழில் திருமுறைகள் பாட அனுமதித்து உத்தரவிட்டது. ஆறுமுகசாமியும் சிற்றம்பலத்தில் திருமுறை பாடினார்.
இந்த வழக்கை போராடி வென்று ஆறுமுகச்சாமி அவரது 94 வயது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத் துறை அனுமதிக்குமாறு இந்து அறநிலையத்துறை கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, கோயிலுக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், சிதம்பரம் மற்றும் சேத்தியாத்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரமேஷ் ராஜ் மற்றும் சுந்தரம், தலைமையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கோயிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரிய ஒளியால் படம் வரையும் மயிலாடுதுறை இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: