நிதி மேலாண்மை குறித்து எளிதாக விளக்கி பணம் சம்பாதிக்கும் யூடியூபர்கள் – சாதித்தது எப்படி?

- நிகில் இனாம்தார் & ஆயுஷி ஷா
- பிபிசி நியூஸ்

ராச்சனா ரானடேவுக்கு யூடியூபில் 35 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவை கொரோனா தொற்று நோய் தாக்கியபோது, மும்பையில் உள்ள திரைப்பட ஸ்டுடியோக்கள் காலவரையறையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், 23 வயதான திரைப்பட இயக்குனர் ஷிவம் கத்ரி, தான் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ கற்றிராத திறன் ஒன்றை கற்றுக்கொள்ள முடிவெடுத்தார். அந்த திறன், நிதி நிர்வாகம்.
புத்தகங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளின் வாயிலாக அதனை ஆராய்ந்துகொண்டிருந்த அவர், யூடியூபில் நிதி மேலாண்மை குறித்து ‘கண்டெண்ட் கிரியேட்டர்கள்’ தங்கள் மொழிகளிலேயே அதுகுறித்து விளக்குவதை ஷிவம் கத்ரி அறிந்தார்.
“அவர்களின் காணொளிகளை புரிந்துகொள்ள மிகவும் எளிதாக இருக்கும். மேலும், அவர்கள் நிதி நிர்வாகம் குறித்த பலவிதமான தலைப்புகளின்கீழ் அந்த காணொளிகளில் விளக்குவர்” என கத்ரி கூறுகிறார்.
ஷிவம் கத்ரி பின் தொடரும் அத்தகைய யூடியூபர்களுள் ஒருவர் ராச்சனா ரானடே. மிகவும் சிக்கலான நிதி மேலாண்மை குறித்த பிரத்யேக வார்த்தைகளை தன் குறும்புத்தனத்துடன் எளிதாக புரியவைப்பது இவரின் சிறப்பம்சமாக இருக்கிறது. இவருக்கு யூடியூபில் சுமார் 35 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்களாக இருப்பது, இந்திய இளம் மற்றும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடையே நிதி மேலாண்மை குறித்து மிகவும் எளிதில் புரிந்துகொள்வதற்கான வளர்ந்துவரும் ஆர்வத்தை உணர்த்துவதாக உள்ளது.
பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையான புகழ்
மேற்கு நகரமான புனேவில் உள்ள புதிய அலுவலகத்தில், ஒரு யூடியூபராக தன் வளர்ச்சியை குறிக்கும் வரைகலை ஒன்றை எங்களுக்குக் காட்டினார். தன்னுடைய முதல் வீடியோவை அவர் பிப்ரவரி 2019இல் பதிவேற்றம் செய்தார். வெறும் 5 மாதங்களில் சுமார் 1,00,000 சப்ஸ்கிரைபர்களை அடைந்தார். அதன்பின் அவருடைய வளர்ச்சி விண்ணளவு உயர்ந்தது.
சில சமயங்களில் ஆட்டோகிராஃப், செல்ஃபிக்காகவும் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வர், இத்தகைய புகழ் பாலிவுட் நட்சத்திரங்கள் அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே கிடைப்பது.
திரைக்காதலியான ராச்சனாவின் அலுவலகத்தின் ஒருபக்க சுவற்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் திரைப்படங்களின் பிரபலமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. நிதி மேலாண்மையில் சிக்கலானவற்றை விளக்க இந்த திரைப்பட வசனங்களை அவர் பயன்படுத்துகிறார். அதில் ஒன்று வெற்றி திரைப்படமான ‘கல் ஹோ நா ஹோ’ என்பது, இதன் அர்த்தம் “நாளை என்பது இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம்” என்பதுதான் – இதன் மூலம் ஆயுள் காப்பீடு வாங்குவதன் அவசியத்தை அவர் விளக்குகிறார்.
“எளிமையான நிதி மேலாண்மை” என்ற ஒரு மந்திரத்தின் அடிப்படையில் தான் இவை இயங்குகின்றன என ரானடே தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வணிக வங்கிக்கணக்குகளை தொடங்கினர்.
இந்தியாவின் இளம் முதலீட்டாளர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது இதனைத்தான். கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் இவர்களுள் லட்சக்கணக்கானோர் பங்குச்சந்தை போட்டியில் பங்கெடுக்க வணிக வங்கிக்கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி 10 இந்தியர்களில் மூன்று பேர் மட்டுமே நிதி குறித்த அறிவு பெற்றவர்களாக உள்ளனர். பங்குச்சந்தை மூலம் எளிதில் பணம் சம்பாதிப்பது எப்படி, தொழில்முனைவோராகி ஒரே இரவில் கோடீஸ்வரராவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த ஆர்வம்தான், இணையத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறையாக நிதி குறித்த கண்டெட்டுகள் உருவாவதற்கான காரணமாக உள்ளன.
வெற்றிக்கான காரணங்கள் என்ன?
“இந்தியாவில் ‘2கே கிட்ஸ்’ தலைமுறையியினருக்கு தற்போது யூடியூப் ஒரு பல்கலைக்கழகமாக செயல்படுகிறது,” எனக்கூறுகிறார் தொழில்முனைவோராக இருந்து தற்போது நிதித்துறையில் செல்வாக்கு செலுத்துபவராக உள்ள (fin-fluencer) ஆங்கூர் வரிக்கூ. தனிநபர் நிதி, தொழில் முனைவோர், உற்பத்தித்திறன் குறித்த நுணுக்கங்கள் குறித்து அவருடைய வீடியோக்கள் கவனம் செலுத்துகின்றன.
இவருடைய பெரும்புகழின் மூலம் தன் முதல் புத்தகமான Do Epic Shit என்ற புத்தகத்தையும் கடந்தாண்டு வெளியிட்டார். இந்த புத்தகம் விரைவிலேயே விற்பனையில் சிறந்து விளங்கியது. அவர் ஒரே இரவில் இப்புகழை அடைந்ததாக ஒரு பார்வை உள்ளது, ஆனால், ஒரு கண்டெண்ட் கிரியேட்டராக தன்னுடைய பயணம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியதாக வரிக்கூ தெரிவித்தார். கொரோனா காலம் இத்துறையில் மாற்றத்தை வரவழைத்தது.
ஆங்கூர் வரிக்கூவின் வீடியோக்கள் இளம் இந்தியர்களிடையே பிரபலமானவையாக உள்ளன.
“இத்தகைய உயர்ந்த தரத்தைக் கொண்ட கண்டெண்டுகளின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதற்கென தங்கள் கைகளில் பணத்துடனும் நேரத்தையும் கொண்டுள்ள பார்வையாளர்கள் பெருகினர், இதற்காக மிகவும் ஆதரவான சந்தையும் உருவானது” என வரிக்கூ கூறுகிறார்.
மலிவாக கிடைக்கும் இணைய டேட்டா, இணையத்தின் வளர்ச்சி, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலிருந்து டிஜிட்டல் வீடியோக்களை நோக்கி நகரும் இந்தியாவின் ஜென் z மற்றும் மில்லினியல் தலைமுறை ஆகியவற்றின் “கலவையே” இந்த வெற்றிக்கான காரணங்களாக வரிக்கூ விளக்குகிறார்.
இளம் இந்தியர்களிடையே அதிகம் எதிரொலிக்கும் தலைப்பாக ‘பணம்’ என்பது இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார். “நாம் அனைவரும் புரிந்துகொள்ள விரும்பும் ஒன்றாக பணம் இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு நமக்கு மிகவும் அரிதாகவே வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
நிகழ்நேர பங்குச்சந்தை செய்திகளை வழங்கும் சில வணிக தொலைக்காட்சி சேனல்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை பெரும்பாலும் முதல்முறை முதலீட்டாளர்களுக்கு பதிலாக, வணிகர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் தேவைகளையே பூர்த்தி செய்வதாக உள்ளன.
யூடியூபர்கள் பலர் வெற்றிகரமாக நிரப்ப முயன்றது இந்த இடைவெளியைத்தான்.
சினிமா வசனங்கள் மூலம் நிதி குறித்த சந்தேகங்களை எளிமையாக விளக்குகிறார் ராச்சனா ரானடே.
அவர்களின் வெற்றியால், விளம்பரதாரர்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் மேலாளர்கள் மூலம் அவர்கள் பணம் ஈட்டுகின்றனர். ஃபோர்ப்ஸ் இதழின்படி, டாப் இன்ப்ளூயன்சர்கள், ஒரு நிறுவனத்தின் பிராண்டட் வீடியோவுக்கு சுமார் 20,000 டாலர்களை (சுமார் 15 லட்ச ரூபாய்) சம்பாதிப்பதாக கூறுகிறது.
நிதிமேலாண்மை கல்வி தற்போது அனைவராலும் அனுகக்கூடியதாக உள்ளது எனப் புகழும் நிபுணர்கள், சில எச்சரிக்கைகள் குறித்தும் அறிவுறுத்துகின்றனர்.
வணிக தொலைக்காட்சி சேனல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர்கள் பிரச்னைக்குரிய பகுதியில் செயல்படுகின்றனர். ரானடே மற்றும் வரிக்கூ தனிப்பட்ட பங்குகளை பரிந்துரைப்பதில்லை, ஆனால் பெரும்பாலானோர் அப்படியில்லை. அடிப்படையான நிபுணத்துவமோ அல்லது தகுதிகளோ இல்லாமல் அவற்றை பரிந்துரைக்கின்றனர்.
“நீண்ட கால முதலீட்டில் சற்று நுணுக்கமான சிக்கல்கள் வரும்போது, சில சந்தைச் சுழற்சிகளைக் கடந்து வந்தவர்களை நான் நம்புவேன். இந்த டிஜிட்டல் நிகழ்வு தற்போது நம்மை முந்திக்கொண்டதால், எல்லாமே உயர்ந்துவிட்டன,” எனக்கூறுகிறார், வணிக தொலைக்காட்சி சேனல் ஒன்றின் முன்னாள் ஆசிரியரான கோவிந்த்ராஜ் எத்திராஜ், இவர் தற்போது உண்மை கண்டறியும் இணையதளம் ஒன்றை நடத்துகிறார்.
இந்திய பங்குச் சந்தைகள் பல ஏற்ற இறக்கங்களை அனுபவித்து வருகின்றன, பில்லியன் கணக்கான டாலர்கள் வெளிநாட்டுப் பணம் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
எனவே, அடுத்த சில ஆண்டுகள், இந்தியாவின் இத்தகைய இன்ப்ளூவன்சர்களின் வெற்றி நிலையானதா அல்லது வெறும் தற்காலிகமானதா என்பதற்கான முதல் சோதனையாக இருக்கும் என்கிறார் எத்திராஜ்.
யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்?